ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தார்களா?
பா.ஜனதா அளித்த வாக்குறுதிப்படி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தார்களா? என்று சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு,:-
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இலவச மின்சாரம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளது. கர்நாடகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இது உள்பட 5 முக்கியமான வாக்குறுதிகளை நிச்சயம் இங்கு அமையும் காங்கிரஸ் அரசு நிறைவேற்றும். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டங்கள் அமல்படுத்தப்பட இருக்கின்றன.
காங்கிரஸ் கட்சி எப்போதும் செயல்படுத்த சாத்தியமுள்ள வாக்குறுதிகளை மட்டுமே மக்களுக்கும் அளிக்கும். ஆனால் பல்வேறு மாநிலங்களில் பா.ஜனதா அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினர். அதன்படி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினர். அதை செய்தார்களா?. அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
விசாரணை நடத்தவில்லை
கர்நாடகத்தில் இருப்பது 40 சதவீத கமிஷன் பா.ஜனதா அரசு. அதானியின் நிறுவனங்களில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் யாருடையது என்பது குறித்து விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தவில்லை. பா.ஜனதா ஊழலில் மூழ்கி போய் உள்ளது. சில பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பனை செய்துவிட்டது. அதனால் கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.