தன்னை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க ராகுல் காந்தியை சித்தராமையா வலியுறுத்தினாரா?- பரபரப்பு தகவல்கள்


தன்னை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க   ராகுல் காந்தியை சித்தராமையா வலியுறுத்தினாரா?-  பரபரப்பு தகவல்கள்
x

டெல்லியில் நடந்த சந்திப்பின் போது தன்னை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க ராகுல்காந்தியிடம், சித்தராமையா வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு: டெல்லியில் நடந்த சந்திப்பின் போது தன்னை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க ராகுல்காந்தியிடம், சித்தராமையா வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்-மந்திரி வேட்பாளர்

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் தேர்தலை சந்திக்கும் என்று அமித்ஷா அறிவித்து உள்ளார். ஜனதாதளம் (எஸ்) கட்சி குமாரசாமியை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி எழுந்து உள்ளது. முதல்-மந்திரி பதவியை பிடிக்க முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூன்) 22-ந் தேதி டெல்லியில் வைத்து சித்தராமையா, டி.கே.சிவக்குமாருடன் ராகுல் காந்தி தனித்தனியாகவும், ஒன்றாகவும் ஆலோசனை நடத்தி இருந்தார். ராகுல் காந்தியிடம் சித்தராமையா பேசிய போது தாவணகெரேயில் நடைபெறும் தனது 75-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும்படியும், அப்போது தன்னை காங்கிரசின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கும்படியும் வலியுறுத்தியதாக தெரிகிறது.

எம்.எல்.ஏ.வாக இருந்து என்ன பயன்?

ஆனால் இதற்கு ராகுல் காந்தி மறுத்ததுடன் கூட்டு தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்கும்படி கூறியதாக தெரிகிறது. மேலும் பஞ்சாப்பில் முன்கூட்டியே முதல்-மந்திரி வேட்பாளரை அறிவித்ததால் தான் தோற்றோம் என்றும் ராகுல் காந்தி கூறியதாக சொல்லப்படுகிறது. அப்போது சித்தராமையா எனக்கு முதல்-மந்திரி பதவி கொடுக்காவிட்டால் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட மாட்டேன் என்றும், 75 வயதுக்கு மேல் எம்.எல்.ஏ.வாக இருந்து எனக்கு என்ன பயன்? என்றும் ராகுல்காந்தியிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் கூட்டு தலைமையின் கீழ் தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தனது பிறந்தநாள் விழாவில் ராகுல் காந்தியை பங்கேற்க வைத்து விட்டு அவர் முன்பு தனது பலத்தை நிருபிக்க சித்தராமையா திட்டமிட்டு இருந்ததாகவும், இதற்கு முட்டு கட்டை போட டி.கே.சிவக்குமார் சில முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story