தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக எம்.இ.எஸ். கட்சியினர் கோஷம்
பெங்களூரு:-
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதிக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கர்நாடகம்-மராட்டிய மாநில எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் மராட்டியர்கள் அதிகம் வசிப்பதால், அவர்களை கவரும் விதமாக பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, அந்த மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி, பெலகாவி மாவட்டம் வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ரவி பட்டீலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று காலை வந்திருந்தார்.
பின்னர் பெலகாவி வடக்கு தொகுதியில் உள்ள திலக் சர்க்கிளில் ரவி பட்டீலுடன், தேவேந்திர பட்னாவிஸ் பிரசாரம் செய்தார். அப்போது கருப்பு துணி அணிந்து கொண்டு, மராட்டிய ஏகிகிரண் சமிதி (எம்.இ.எஸ்.) கட்சியினர் அங்கு வந்தனர். மேலும் தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக எம்.இ.எஸ். கட்சியினர் கோஷங்களை எழுப்பினார்கள். மராட்டியத்தை சேர்ந்த எம்.இ.எஸ். கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் செய்ய தேவேந்திர பட்னாவிஸ் வந்திருப்பதாகவும், பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கூடாது என்றும் தொடர் கோஷங்களை எழுப்பினார்கள். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து எம்.இ.எஸ். கட்சியினரை பிடித்து சென்றனர். மேலும் தேவேந்திர பட்னாவிசுக்கு முன் எச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.