மராட்டியத்தின் அடுத்த முதல் மந்திரியாகிறார் தேவேந்திர பட்னாவிஸ்?
உத்தவ் தாக்கரே பதவி விலகியதை தொடர்ந்து மராட்டியத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு உள்ளது.
மும்பை,
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தங்கி இருந்து நெருக்கடி அளித்து வந்தனர். மொத்தம் உள்ள 56 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 39 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்றதால் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த சிவசேனா தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதை தொடர்ந்து ஆட்சியை காப்பாற்ற ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றனர். கோர்ட்டு உத்தரவு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக இருந்தது. ஜூலை 31-ந்தேதி வரை தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இதற்கிடையில், மராட்டிய முதல் மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட் சென்ற போதிலும், நம்பிக்கை வாக்கெடுப்பு தடை விதிக்க கோர்ட் மறுத்து விட்டது.
இதையடுத்து, உத்தவ் தாக்கரே தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே இரவு 11.44 மணியளவில் கவர்னர் மாளிகை சென்று கோஷியாரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட கவர்னர் புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்-மந்திரியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
உத்தவ் தாக்கரே பதவி விலகியதை தொடர்ந்து மராட்டியத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு உள்ளது. அந்த கட்சிக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 39 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 11 சுயேட்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது. முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பார் என்று தகவல்கள் கூறுகின்றன. சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்னாத் ஷிண்டே துணை முதல் மந்திரியாக பதவியேற்கக் கூடும் என்றும் மராட்டிய அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவியேற்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.