புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தேவேகவுடா பங்கேற்கிறார்


புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தேவேகவுடா பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தேவேகவுடா பங்கேற்க ஜனதா தளம்(எஸ்) செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு:

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தேவேகவுடா பங்கேற்க ஜனதா தளம்(எஸ்) செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக குமாரசாமி கூறியுள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று தேவேகவுடா தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆதிவாசி பெண் என்று கூறி காங்கிரஸ் முதலை கண்ணீர் வடிக்கிறது. ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, அவரை ஆதரிக்காமல் யஷ்வந்த்சின்காவை காங்கிரஸ் நிறுத்தியது ஏன்?.

அடிக்கல் நாட்டு விழா

நாடாளுமன்ற கட்டிடம் ஒரு கட்சிக்கு சேர்ந்தது அல்ல. மக்களின் வரிப்பணத்தால் அது கட்டப்பட்டது. ஜனாதிபதியை அழைக்கவில்லை என்று கூறி அந்த காரணத்தை வைத்து விழாவை காங்கிரஸ் புறக்கணிக்கிறது. சத்தீஸ்கர் மாநில சட்டசபை கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் சோனியா காந்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

அங்கு ஜனாதிபதி குறித்து காங்கிரசுக்கு நினைவு வரவில்லையா?. பெங்களூருவில் விகாச சவுதா கட்டிடம் திறக்கப்பட்டபோது ஜனாதிபதியை அழைத்தனரா?. அன்று முதல்-மந்திரியாக இருந்தவரே அந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனால் நாடாளுமன்ற கட்டிட விஷயத்தில் காங்கிரஸ் நாடகமாடுகிறது.

யாரும் கருத வேண்டாம்

தேவேகவுடா அந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இதனால் பா.ஜனதா மீது ஜனதா தளம்(எஸ்) மென்மையான போக்கை கொண்டுள்ளதாக யாரும் கருத வேண்டாம். அந்த விழாவில் எங்கள் கட்சி பங்கேற்பது குறித்து கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் அந்த விழாவில் தேவேகவுடா கலந்து கொள்ள ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாங்கள் காங்கிரஸ், பா.ஜனதாவை சமதூரத்தில் வைத்து பார்க்கிறோம். எங்கள் கட்சியின் கொள்கையில் எந்த மாறுபாடும் கிடையாது. கேரளாவில் எங்கள் கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்க முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

அரசியல் நிலவரம்

தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது என்று செயற்குழு கூட்டத்தில் தலைவர்கள் எனக்கு அறிவுறுத்தினர். நாட்டில் நிலவும் இன்றைய அரசியல் நிலவரம் குறித்தும் விரிவாக விவாதித்தோம். கட்சியின் நலன் கருதி 2 மாதங்களுக்கு ஒரு முறை கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு தலைவர்கள் கூறினர்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story