மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதித்தும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் வாலிபர் பரிதவிப்பு; வரன் தேடி தரும்படி அரசுக்கு கோரிக்கை


மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதித்தும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் வாலிபர் பரிதவிப்பு; வரன் தேடி தரும்படி அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 16 Jun 2023 3:31 AM IST (Updated: 16 Jun 2023 12:17 PM IST)
t-max-icont-min-icon

மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கும் வாலிபர் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் பரிதவித்து வருகிறார். இந்த நிலையில் வரன் தேடி தரும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு:

பெண் வேண்டி கோவிலுக்கு நடைபயணம்

கர்நாடக மாநிலம் மண்டியாவில் விவசாய பட்டதாரிகளுக்கு பெண்கள் கிடைப்பது இல்லை என கூறப்படுகிறது. இதனால் திருமணத்திற்கு பெண் வேண்டி இளம்விவசாயிகள் மைசூருவில் இருந்து சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே மாதேஸ்வரன் மலையில் உள்ள மலை மாதேஸ்வரா கோவிலுக்கு நடைபயணம் சென்று நூதன வழிபாடு நடத்திய சம்பவம் நடந்தது.

அதுபோல் கோலாரில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத வாலிபர் ஒருவர், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியிடம் தனக்கு வரன்தேடி தரும்படி கோரிக்கை விடுத்த நூதன நிகழ்வும் நடந்தது.

28 வயது வாலிபர் கோரிக்கை

இந்த நிலையில் கர்நாடகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்கவில்லை என்றும், எனவே அரசு எனக்கு வரன் தேடி தரும்படி கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.

அதாவது கதக் மாவட்டம் முண்டரகி தாலுகாவில் உள்ள தம்பல் கிராமத்தை சேர்ந்தவர் முத்து ஹுகாரா (வயது 28). இவர் வியாபாரம் செய்து வருகிறார். மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதித்து வருகிறார்.

இவர் தனக்கு திருமணம் செய்ய பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டார். சுமார் 2 ஆண்டுகளாக அவர் வரன் தேடி வந்துள்ளார். இருப்பினும் அவருக்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் நொந்துபோன முத்து ஹுகாரா தம்பல் கிராம பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

சாதி தடை இல்லை

அந்த கோரிக்கை மனுவில், எனக்கு 28 வயது ஆகிறது. நான் திருமணம் செய்து கொள்ள பெண் பார்த்து வந்தேன். ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கும் நிலையிலும் எனக்கு இதுவரை பெண் கிடைக்கவில்லை. எனக்கு சகோதரி, சகோதரர்கள் இல்லை.

இதனால் வரன் தேடி அலைய முடியவில்லை. எனவே கர்நாடக அரசு நான் திருமணம் செய்துகொள்ள பெண் பார்த்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். சாதி தடை இல்லை. எந்த சாதியை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் நான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story