விரக்தி, மனஅழுத்தம்... தற்கொலை செய்த 2 மாதங்களுக்கு பின் நர்சுக்கு வந்த பணியிட மாறுதல் உத்தரவு


விரக்தி, மனஅழுத்தம்... தற்கொலை செய்த 2 மாதங்களுக்கு பின் நர்சுக்கு வந்த பணியிட மாறுதல் உத்தரவு
x

மத்திய பிரதேசத்தில் பணியிட மாறுதல் கோரி கிடைக்காத விரக்தியில் நர்சு தற்கொலை செய்த 2 மாதங்களுக்கு பின் பணியிட மாறுதல் உத்தரவு வந்த அவலம் நடந்து உள்ளது.


போபால்,


மத்திய பிரதேசத்தின் பெதுல் பகுதியை சேர்ந்த இளம்பெண் தன்வி தபண்டே (வயது 28). சிவ்புரி மாவட்டத்தில் கோத் சுகாதார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அவருக்கு நர்ஸ் வேலை கிடைத்தது.

எனினும், வீட்டை விட்டு தொலைவில் வசித்தது மற்றும் பணி சுமையும் அதிகரித்ததில் அவர் மனஅழுத்தத்தில் இருந்து உள்ளார். இதனால், பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்து உள்ளார். பல முறை முயன்றும் தோல்வியே பலனாக கிடைத்து உள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 20-ந்தேதி அவர் வேலைக்கு வராத நிலையில், அவரை பணிக்கு அழைப்பதற்காக வார்டு ஊழியர் சென்று உள்ளார்.

ஆனால், படுக்கையறையில் நர்சு தன்வி மூச்சு, பேச்சின்றி கிடந்து உள்ளார். அந்த அறையில் தூக்க மாத்திரைகளும் கிடந்து உள்ளன. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், பணி சுமை, வீட்டை விட்டு தொலைவில் வேலை செய்த விரக்தி ஆகியவற்றால் மனஉளைச்சலுக்கு அவர் ஆளானது தெரிய வந்தது. இதற்காக போபாலில் சிகிச்சையும் பெற்று வந்து உள்ளார்.

அவரது ஊருக்கு அருகேயுள்ள போபால் அல்லது வேறு மாவட்டங்களில் பணியாற்ற அவர் விரும்பியுள்ளார். மனஅழுத்தத்தில் இருந்து விடுபட முடியாத அவர், தற்கொலை செய்து உள்ளார்.

இந்நிலையில், 2 மாதங்களுக்கு பின்னர் மத்திய பிரதேச சுகாதார துறை தன்வியை பணியிட மாறுதல் செய்து உள்ளது. இதுபற்றி தேசிய சுகாதார இயக்கம் வெளியிட்ட பணியிட மாறுதல் பட்டியலில் தன்வியின் பெயரும் இடம் பெற்று உள்ளது. அவர், சிவ்புரி மாவட்டத்தில் இருந்து ரெய்சன் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

இதுபற்றி சிவ்புரி மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரியான டாக்டர் பவன் ஜெயின் கூறும்போது, தன்வியின் மரணம் பற்றிய விவரங்கள் அனைத்தும் போபால் நகருக்கு அனுப்பப்பட்டு விட்டன.

இந்த பணியிட மாறுதல் உத்தரவுகள் போபாலில் இருந்தே வந்து உள்ளன. அதனால், தற்போது நான் எதுவும் கூறுவதற்கு இல்லை. அந்த பட்டியலை கூட நான் இன்னும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.


Next Story