பணமதிப்பிழப்பு விவகாரம்: தொடர்புடைய ஆவணங்களை தாக்கல் செய்ய ஆர்.பி.ஐ., மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


பணமதிப்பிழப்பு விவகாரம்:  தொடர்புடைய ஆவணங்களை தாக்கல் செய்ய ஆர்.பி.ஐ., மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

பணமதிப்பிழப்பு விவகாரத்தில் தொடர்புடைய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி ஆர்.பி.ஐ. மற்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.



புதுடெல்லி,


நாட்டில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி இரவு, அப்போது புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கொண்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அதன்படி நாடு முழுவதும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளுக்கு பதில், புதிய ரூ.500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றி கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தின் மூலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு இந்தியாவில் ரூ.15.40 முதல் ரூ.15.5 லட்சம் கோடி வரையில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது என மதிப்பிடப்பட்டு இருந்தது. பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் வங்கிகள் மூலம் புதிய நோட்டுகளை பெற்று கொள்ள மத்திய அரசு காலஅவகாசம் வழங்கியது.

இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, கடந்த 2016 நவம்பர் 15 அன்று விசாரித்த அப்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு, பணமதிப்பு நீக்க திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது என்றாலும், அதனால் மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் என்று தெரிவித்திருந்தது.

அரசின் பொருளாதார கொள்கையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை, இந்த விவகாரத்தில் அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தடை உட்பட இடைக்கால உத்தரவு எதனையும் பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து, 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட 58 ரிட் மனுக்களை நீதிபதி எஸ். அப்துல் நசீர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்கிறது. நீதிபதிகள் கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோரும் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்ட நீதிபதி அமர்வு இன்று கூறும்போது, விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில், மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியோர் தொடர்புடைய ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதனை தொடர்ந்து அரசு வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி, மூடி முத்திரையிடப்பட்ட உறையில், தேவையான தொடர்புடைய ஆவணங்களை தாக்கல் செய்வேன் என்று நீதிபதி அமர்வின் முன் கூறியுள்ளார்.

அதற்கு முன் நீதிபதி அமர்வு நேற்று கூறும்போது, பொருளாதார கொள்கை விவகாரங்களில் குறிப்பிட்ட எல்லையுடனேயே நீதிமன்ற மறுஆய்வு இருக்கும் என்பதற்கு பொருள், கோர்ட்டு கைகட்டி கொண்டு, அமர்ந்து இருக்கும் என்பதல்ல. அரசு எந்த வகையில் முடிவை எடுத்துள்ளது என்பது பற்றியும் கோர்ட்டால் ஆய்வு செய்ய முடியும் என்று தெரிவித்து உள்ளது.


Next Story