இன்று பண மதிப்பிழப்பு தினம்: பிளாஷ் பேக் கூறி கோபத்தை கொட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்
பண மதிப்பிழப்புக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரொக்கம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
ஒரே அறிவிப்பில் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய 'பண மதிப்பிழப்பு' அறிவிக்கப்பட்ட தினம் இன்று.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அன்று இரவு திடீரென தொலைக்காட்சியில் அவசர உரையாற்றிய பிரதமர் மோடி, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், மக்கள் தங்கள் வசமுள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.
கருப்பு பணத்தை ஒழிக்கவும் கருப்பு பண பரிமாற்றத்தில் ஈடுபடுவோரை அடையாளம் காணவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பணத்தை மாற்றுவதற்கு காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளில் குவியத் தொடங்கினர். குறித்த நேரத்திற்குள் பணத்தை மாற்ற முடியாதவர்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசின் நடவடிக்கை சரியானதே என 2023 ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு பிறகும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதை நிறுத்தவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் முழுமையாக நிறைவேறியதா? அல்லது தோல்வியடைந்ததா? என்ற விவாதம் நீடிக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட தினமான இன்று, மக்கள் தாங்கள் சந்தித்த இன்னல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளில் காத்திருந்து பட்ட கஷ்டங்கள் மற்றும் அதுதொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடியுள்ளனர். குறிப்பாக எதிர்க்கட்சியினர், பிரதமர் மீது தாறுமாறான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். கருப்பு பணம் ஒழியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல் பண மதிப்பிழப்புக்கு பிறகு நாட்டில் டிஜிட்டல் முறை பிரபலமாக இருந்தாலும் பணப்புழக்கம் குறையவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மக்கள் ரொக்கப் பரிமாற்றத்தில் இருந்து டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாறத்தொடங்கினர். இந்த டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. ஆனாலும், இந்தியப் பொருளாதாரத்தில் புழக்கத்தில் உள்ள ரொக்கம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2016 நவம்பரில் ரூ.17 லட்சம் கோடியாக இருந்த ரொக்கப் புழக்கம், 2023 அக்டோபரில் ரூ.33 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் சொத்து வாங்கியவர்களில் 76 சதவீதம் பேர் சொத்து மதிப்பின் ஒரு பகுதியை ரொக்கமாக செலுத்தியிருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
வாகனம், கேட்ஜெட் மற்றும் அதிக மதிப்புள்ள பெரும்பாலான வீட்டு உபயோகப் பொருட்களுக்கான பணப் பரிமாற்றம் டிஜிட்டல் முறையிலும் ரசீது மூலமாகவும் நடப்பதாகக் கணக்கெடுப்பு கூறுகிறது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் மளிகைப் பொருட்கள், உணவு மற்றும் உணவு விநியோகம் மற்றும் வீட்டு உதவி, வீடு பழுதுபார்ப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு இன்னும் ரொக்கப் பணத்தை பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.