"பணமதிப்பிழப்பும், ஜி.எஸ்.டி.யும் சிறுதொழில் வணிகர்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டது" - ராகுல் காந்தி
சிறுதொழில் வணிகர்களின் பணம் பறிக்கப்பட்டு நான்கைந்து தொழிலதிபர்களின் கைகளில் கொடுக்கப்படுகிறது என ராகுல் காந்தி கூறினார்.
போபால்,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, 'இந்திய ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கினார்.
தமிழகத்தைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என தென்னிந்தியப் பகுதிகளை முடித்துக்கொண்டு மராட்டிய மாநிலத்திற்குச் சென்றார். அதன்பின், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேச எல்லைக்குள் வந்த அவர் தொடர்ந்து பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"மத்திய அரசு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவை மக்களை கடுமையாக பாதித்தது மட்டுமின்றி, சிறுதொழில் செய்யும் வணிகர்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டது.
நான் இந்திய ஒற்றுமை யாத்திரை மூலம் தவம் எதையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் உண்மையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் நீண்ட தூரம் நடந்து சென்ற தொழிலாளர்கள், மக்களுக்கு உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் தான் நாட்டின் உண்மையான 'தபஸ்விகள்'.
சிறுதொழில் உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் இல்லை. அவர்களின் பாக்கெட்டில் இருந்து பணம் பறிக்கப்பட்டு நான்கைந்து தொழிலதிபர்களின் கைகளில் கொடுக்கப்படுகிறது."
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.