ஜனநாயகம் நசுக்கப்பட்டு உள்ளது; கார்கே தலைமையில் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சிகள் போராட்டம்
ஜனநாயகம் காலின் கீழே போட்டு நசுக்கப்பட்டு உள்ளது என கூறி காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் மற்றும் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு ஆகியவற்றால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு வரும் சூழலில், தற்போது புதிய விவகாரம் ஒன்று கிளம்பி உள்ளது.
காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கர்நாடகாவின் கோலார் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவதூறு வழக்கில் கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக நீடித்து வந்த ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, வயநாடு தொகுதியில் நேற்று முன்தினம் கருப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யவும் அக்கட்சி முடிவு செய்து உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பிரியங்கா காந்தி வதேரா, ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அக்கட்சி சார்பில் டெல்லி ராஜ்காட் பகுதியில் நேற்று நாள் முழுவதும் சங்கல்ப சத்யாகிரகம் என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவானது. காங்கிரஸ் கட்சியின் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். எனினும், போலீசாரின் தடையை மீறி காங்கிரஸ் தலைவர்கள் மாலை வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அதானி விவகாரம் மற்றும் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் ஆகியவற்றில் மத்திய அரசை சாடிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, நாட்டில் காலின் கீழே போட்டு ஜனநாயகம் நசுக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
இதனை வெளிப்படுத்தவே, நாங்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்திற்கு பிரதமர் மோடி முடிவு கட்டி வருகிறார் என தெரியப்படுத்த விரும்பினோம். முதலில் அவர், சுயாட்சி அமைப்புகளை காலி செய்த பின்னர், தேர்தலில் வெற்றி பெற்றவர்களை மிரட்டி அவர்களது சொந்த அரசாங்கங்களை கொண்டு வந்தனர்.
அதன்பின்னர், அரசுக்கு முன்னால் அடிபணியாதவர்களை வளைப்பதற்காக, அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என்று அவர் குற்றச்சாட்டாகவும் கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர்கள் பேட்டிக்கு முன்னர், கருப்பு உடையணிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் நோக்கி பேரணியாகவும் சென்று தங்களது எதிர்ப்புகளை அவர்கள் வெளிப்படுத்தினர்.