மங்களூருவில் மதுபான விடுதியை மூடக்கோரி மாணவர்கள் போராட்டம்
மங்களூருவில் பள்ளி அருகே திறக்கப்பட்டுள்ள மதுபான விடுதியை மூடக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மங்களூரு-
மங்களூருவில் பள்ளி அருகே திறக்கப்பட்டுள்ள மதுபான விடுதியை மூடக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி மாணவர்கள் போராட்டம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பலேபுனி கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் நுழைவுவாயில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் புதிதாக மதுபான விடுதி திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் அந்த மதுபான விடுதி அகற்றப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், பள்ளி அருகே திறக்கப்பட்டுள்ள மதுபான விடுதியை மூடக்கோரி நேற்று முன்தினம் அந்த மதுபான விடுதி முன் மாணவ-மாணவிகள் திடீரென்று போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அனுமதி ரத்து
இந்த போராட்டம் குறித்து பள்ளியின் நிர்வாக குழு தலைவர் ராஜாராம் பேசுகையில், பள்ளி மற்றும் கோசாலை அருகே மதுபான விடுதி திறப்பது சட்டவிரோதம் என்று அரசு சொல்கிறது. அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்காமல், பொதுமக்களிடம் கருத்துகளை பெறாமல் அவசர அவசரமாக மதுபான கடைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி அமைந்திருக்கும் 100 மீட்டர் சுற்றளவில் மது விற்பனை செய்யக்கூடாது. ஆனால் விதிமுறையை மீறி பள்ளி அருகே மதுபான விடுதி திறக்கப்பட்டுள்ளது. பள்ளி நடக்கும்போதும், மாலையில் பெண் குழந்தைகள் வீடு திரும்பும்போதும் சிக்கல் உருவாகும்.
மதுபான விடுதிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கிராம பஞ்சாயத்தை வலியுறுத்துகிறோம். இந்த மதுபான விடுதியால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும். மதுபான விடுதியை அகற்றும் வரை ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவோம். எங்களின் கோரிக்கை ஏற்கபடாவிட்டால் காலவரையற்ற போராட்டம் நடத்துவோம். இதுதொடர்பாக மந்திரி மற்றும் கலால் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.
பரபரப்பு
இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.