தெருவில் மழைநீர் தேங்குவது தொடர்பாக புகார் அளிக்க ஸ்மார்ட்போன் செயலி - டெல்லி மாநகராட்சி தகவல்
தலைநகர் டெல்லியில் மழைநீர் தேங்குவது தொடர்பாக எம்சிடி 311 செயலி மூலம் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குவது தொடர்பாக புகார் அளிக்க புதிய செயலியை ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது.
எம்சிடி 311 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் இப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்குவது கொசு உற்பத்தியைப் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக டெங்கு பரவும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில், எம்சிடி 311 செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யுமாறு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன்(எம்சிடி) கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை சம்பந்தப்பட்ட துறை மூலம் விரைவில் தீர்க்க இந்த செயலியில் புகார் அளிக்கலாம்.
தங்கள் பகுதியில் கனமழைக்கு மத்தியில் தண்ணீர் தேங்குவது தொடர்பான ஏதேனும் பிரச்சனைகளை தெரிவிக்கவும், சாலைகளில் உள்ள பள்ளங்கள், கவனிக்கப்படாத குப்பைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமான நடவடிக்கைகள் போன்ற ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் புகாரளிக்க எம்சிடி 311 செயலியை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
எம்சிடி 311 செயலியில் போக்குவரத்து விவரங்களைக் கண்காணிக்க முடியும், இந்த செயலியில் 24 மணி நேர போக்குவரத்து உதவி எண் உள்ளது. மேலும் இந்த செயலி அருகிலுள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நினைவுச் சின்னங்கள், பொது கழிப்பறைகள், இ-சார்ஜிங் நிலையத்தின் இருப்பிடம் மற்றும் பிற சேவைகள் பற்றிய தகவல்களையும் கொண்டுள்ளது.