டெல்லியில் மின்சார பஸ்கள் அறிமுகம்: 3 நாட்கள் இலவசமாக பயணிக்கலாம்
டெல்லியில் மின்சார பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் முதல் 3 நாட்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி மாநில அரசு போக்குவரத்துக்கழகம் 150 மின்சார பஸ்களை புதிதாக வாங்கி இருக்கிறது. அவற்றின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. புதிய பஸ்களின் இயக்கத்தை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் ஒரு பஸ்சில் ஏறி ராஜ்காட் வரை பயணம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி போக்குவரத்துத்துறை மந்திரி கைலாஷ் கெலாட், தலைமைச்செயலாளர் நரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாசு கட்டுப்பாட்டை நோக்கமாக கொண்டு இந்த பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகளுக்காக தானியங்கி சாய்வுதளம் உள்ளது. குளிரூட்ட வசதி, கண்காணிப்பு கேமரா, அவசரகால அழைப்பு பொத்தான்கள் உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. சிறப்பு சலுகையாக இந்த பஸ்களில் முதல் 3 நாட்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த ஓராண்டுக்குள் 2 ஆயிரம் மின்சார பஸ்கள் வாங்கப்படும் எனவும், ஆயிரம் பஸ்களுக்கான ஒப்பந்தத்துக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது எனவும் போக்குவரத்துத்துறை மந்திரி கூறினார். இதற்காக மாநில அரசு ஆயிரத்து 862 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மத்திய அரசும் ரூ.150 கோடி ஒதுக்கியிருக்கிறது.