நடுவானில் பயங்கரமாக குலுங்கிய விமானம்.. பயந்து நடுங்கிய பயணிகள்


நடுவானில் பயங்கரமாக குலுங்கிய விமானம்.. பயந்து நடுங்கிய பயணிகள்
x

பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்காக வருத்தம் தெரிவிப்பதாக இண்டிகோ விமான நிறுவனம் கூறி உள்ளது.

ஸ்ரீநகர்:

டெல்லியில் இருந்து நேற்று ஸ்ரீநகர் நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. அப்போது மோசமான வானிலை காரணமாக விமானம் பயங்கரமாக குலுங்கியது. சிறிது நேரம் இந்த நிலை நீடித்தது. இதனால் பயணிகள் பயத்தில் நடுங்கினர். சிலர் தங்களின் இஷ்ட தெய்வங்களை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

பின்னர் சிறிது நேரத்தில் நிலைமை சீரடைந்ததையடுத்து விமானம் சீராக சென்றதுடன், ஸ்ரீநகரில் பத்திரமாக தரையிறங்கியது.

சீரற்ற வானிலை நிலவும் டர்புலன்ஸ் பகுதியில் சென்றபோது விமானம் குலுங்கியதாகவும், பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் விமான நிறுவனம் கூறி உள்ளது. டர்புலன்சில் சிக்கி விமானம் குலுங்கும்போது பயணிகளால் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், கணிக்க முடியாத காற்று இயக்கம் போன்ற வளிமண்டல சீரற்ற தன்மை டர்புலன்ஸ் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு காற்றின் சமநிலை பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் விமானம் செல்லும்போது விமானம் சீராக பறக்க முடியாமல் குலுங்கும். மிக அரிதாகவே இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்.

இதற்கிடையே மோசமான வானிலை காரணமாக, ஸ்ரீநகருக்குச் செல்லும் மற்றும் ஸ்ரீநகரில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.


Next Story