டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்: ரெயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு!
டெல்லியில் இளம்பெண் ஒருவர் தேங்கியிருந்த மழைநீரில் மிதிக்காமல் இருப்பதற்காக அருகில் இருந்த மின்கம்பத்தை பிடித்து போது அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு இளம்பெண் துடிதுடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி உள்ள வடமாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, 19 மாவட்டங்களில் 4.89 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் ஓடும் நதிகளில், வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது.
இந்தநிலையில், டெல்லி ரெயில் நிலையத்தில் மழை நீரில் மிதிக்காமல் இருக்க மின் கம்பத்தை பிடித்த இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
கிழக்கு டெல்லியில் உள்ள பரீத் விஹார் பகுதியில் வசித்து வரும் ஷாக்சி அகுஜா என்ற பெண் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ரெயில் நிலையம் வந்தார். அவருடன் இரண்டு பெண்கள் மற்றும் 3 குழந்தைகளும் வந்து இருந்தனர். டெல்லியில் நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி கிடந்தது. ரெயில் நிலையத்திலும் தண்ணீர் தேங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.
இந்த தேங்கி கிடந்த தண்ணீரில் மிதிக்காமல் இருப்பதற்காக ஷாக்ஷி அகுஜா அருகில் இருந்த மின் கம்பத்தை பிடித்துள்ளர். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவருடன் வந்த சகோதரி மாதவி சோப்தா என்பவரும் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார். உடனடியாக அங்கு இருந்த பயணிகள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும், ஷாக்ஷி அகுஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
மாத்வி சோப்டா காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இளம்பெண் தொட்ட அந்த மின் கம்பத்தின் அடிப்பகுதியில் வயர் ஒன்று வெளியே தொங்கிக் கொண்டு இருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
எனவே, மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து ஷாக் அடிக்க இதுவே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அலட்சியமாக செயல்பட்ட ஊழியர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரெயில்வே ஊழியர்களின் அலட்சியமே இளம்பெண் மரணத்திற்கு காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு காரணமான ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, வரும் காலத்தில் இதுபோன்ற துயர சம்பவம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வைக்கும் கோரிக்கையாக இருந்தது.