டெல்லி: ஆடம்பர கார்கள் திருட்டு - 3 போ் கைது
டெல்லியில் நவீன சாதனங்களை பயன்படுத்தி ஆடம்பர கார்களை திருடி வந்த 3 பேரை போலீசாா் கைது செய்துள்ளனா்.
புதுடெல்லி,
நவீன சாதனங்களைக் கொண்டு டெல்லியில் ஆடம்பர கார்களை திருடி விற்று வந்த மணிஷ் ராவ், ஜெகதீப் சர்மா, ஆஸ் முகமது ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள், பிரசித்திபெற்ற ஹாலிவுட் படமான 'பாஸ்ட் அண்டு பியூரியஸ்' பாணியில் நவீன சாதனங்களைப் பயன்படுத்தி கார்களை திருடியுள்ளனர்.
இந்த கும்பல் ஆடம்பர கார்களின் சாப்ட்வேரில் ஊடுருவி தங்களின் புதிய சாப்ட்வேரை நிறுவுவதற்கு ஒரு நவீன தொழில்நுட்ப கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் புதிய சாவிகள் மூலம் சில நிமிடங்களில் கார்களை களவாடிவிடுவார்களாம்.
கார்களின் ஜி.பி.எஸ்.சை செயலிழக்கவைக்க 'ஜாமரையும்' இந்த திருட்டு டீம் பயன்படுத்தியுள்ளது.திருடிய கார்களை விற்கும் வரை சந்தேகம் வராதபடி, கண்காணிப்பு கேமரா இல்லாத முக்கிய இடங்களில் நிறுத்திவைத்துள்ளனர். இவ்வாறு டெல்லியில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட விலை அதிகமுள்ள ஆடம்பர கார்களை ராஜஸ்தான் மாநிலத்தில் விற்றுள்ளனர்.
இதுவரை இக்கும்பல் 40 கார்களை திருடி உள்ளதாக போலீசார் நேற்று தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, கார் திருட்டுக்கு பயன்படுத்திய நவீன சாதனங்கள், ரிமோட் கார் சாவிகள், திருடப்பட்ட 7 கார்கள், 5 தோட்டாக்களுடன் 2 கைத்துப்பாக்கிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.