டெல்லி: ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளம்; 2 மாணவிகள் பலி


டெல்லி: ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளம்; 2 மாணவிகள் பலி
x

டெல்லி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 2 மாணவிகள் பலியான சம்பவத்தில் மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை மேற்கொள்ளும்படி தலைமை செயலாளருக்கு டெல்லி மந்திரி அதிஷி உத்தரவிட்டு உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், பழைய ராஜீந்தர் நகர் பகுதியில் தரை தளத்திற்கு கீழே அடித்தளத்தில், ஐ.ஏ.எஸ். படிப்பவர்களுக்காக பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கனமழையால் வெள்ள நீர் மையத்திற்குள் புகுந்துள்ளது.

இதில், மாணவ மாணவிகள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் திணறியுள்ளனர். இதுபற்றி டெல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உள்ளூர் போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் உடனடியாக மீட்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டதில் 2 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்த அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளன. மற்றொரு மாணவரை காணவில்லை. அவரை தேடும் பணி தொடர்கிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும், டெல்லி மேயர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். இதனை டெல்லி மந்திரி அதிஷி, எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த சம்பவம் பற்றி மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை மேற்கொள்ளும்படி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டு உள்ளார். அதுபற்றி 24 மணிநேரத்திற்குள் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படியும் மந்திரி அதிஷி கேட்டு கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பான நபர்கள் ஒருவரும் தப்ப முடியாது என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்து உள்ளார். வெள்ளம் புகுந்தபோது, பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் 30 மாணவர்கள் வரை இருந்துள்ளனர். 3 பேர் சிக்கி கொண்டனர். மற்றவர்கள் தப்பி விட்டனர் என தீயணைப்பு துறை அதிகாரி அதுல் கார்க் கூறியுள்ளார். வெள்ள நீரை வெளியேற்றி மீதமுள்ள மாணவரை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.


Next Story