டெல்லி அவசர சட்ட விவகாரம்: ஆம் ஆத்மி அரசை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு
அவசர சட்டத்தை ஆதரிக்கப் போவதில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி அரசின் நிர்வாக பணிகள் குறித்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டம் டெல்லி அரசின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் இருப்பதாகக் குற்றம்சாட்டிய டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தங்களை ஆதரிக்காதது குறித்து பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அதிருப்தி தெரிவித்திருந்தார். எதிர்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், டெல்லி அரசின் நிர்வாகப் பணிகள் தொடர்பான அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்த சட்டத்தைப் பொறுத்தவரை தங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளதாகவும், இந்த சட்டத்தை ஆதரிக்கப் போவதில்லை எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இது ஒரு நல்ல முன்னேற்றம் என ஆம் ஆத்மி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.