திகார் சிறையில் அடைக்கப்பட்ட சந்திரசேகர ராவ் மகள்


திகார் சிறையில் அடைக்கப்பட்ட சந்திரசேகர ராவ் மகள்
x

Image Courtacy: ANI

தினத்தந்தி 28 March 2024 2:42 AM IST (Updated: 28 March 2024 2:46 AM IST)
t-max-icont-min-icon

சந்திரசேகர ராவ் மகள் கவிதாவை ஏப்ரல் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மகள் கவிதா, கடந்த 15-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் 10 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடந்தது.

விசாரணை முடிந்தநிலையில், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி கோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து அன்று மாலையே அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அன்று சிறையில் முதல்நாள் இரவை கழித்தார்.

இதுபற்றி சிறை அதிகாரிகள் கூறுகையில், "கவிதா, பெண்களுக்கான 6-ம் எண் சிறையில் அடைக்கப்பட்டாா். அங்கு சுமார் 100 பெண் கைதிகள் உள்ளனர். வேறு 2 பெண் கைதிகள் உள்ள அறையை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனை முடிந்தவுடன் நேராக அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலில் அவருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருந்தது. சற்று நேரத்தில் சீரானது.

கவிதாவுக்கு வீட்டு உணவு, மெத்தை, செருப்பு, ஆடைகள், படுக்கை விரிப்பு, புத்தகங்கள், பேனா, பேப்பர், மருந்துகள் ஆகியவை அளிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.

அதன்படி, அவருக்கு மெத்தை, செருப்பு, ஆடைகள், படுக்கை விரிப்பு, மருந்துகள் ஆகியவை அளிக்கப்பட்டன. சிறை உணவையே அவர் சாப்பிட்டார். இரவில், பருப்பும், சாதமும் சாப்பிட்டார்.

நகைகள் அணிய கோர்ட்டு அனுமதி அளித்தபோதிலும், கவிதா நகைகள் அணியவில்லை. அவர் விசேஷமாக எதுவும் கேட்கவில்லை. சிறை விதிகள் மற்றும் கோர்ட்டு உத்தரவுக்கேற்ப அனைத்தும் வழங்கப்படும். புதன்கிழமை (நேற்று) காலையில், கவிதாவுக்கு தேநீரும், தின்பண்டங்களும் அளிக்கப்பட்டன. சிறை நூலகத்தில் புத்தகங்கள் எடுத்து படிக்க அவருக்கு அனுமதி உண்டு" என்று அவர்கள் கூறினர்.


Next Story