பண மோசடி வழக்கு: டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன் மறுப்பு
பணமோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர ஜெயின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின்.
கடந்த 2017-ம் ஆண்டு சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரின் குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியது.
டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை கடந்த மே மாதம் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்தது.
பணமோசடி வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி விகாஸ் துல் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்தநிலையில், பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் மற்றும் இருவரின் ஜாமீன் கோரும் மனுக்கள் மீதான உத்தரவை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு தள்ளுபடி செய்தது.