சோனியா காந்தி மீதான அமலாக்கத் துறை விசாரணையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!


சோனியா காந்தி மீதான அமலாக்கத் துறை விசாரணையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
x

நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறை விசாரணைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜராகிறார்.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறை விசாரணைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜராகிறார்.

நேஷனல் ஹெரால்ட் நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8ஆம் தேதியன்று ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால் விசாரணைக்கு ஆஜராவதில் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமெனக் கோரியிருந்தார்.

இதற்கிடையே ஜூலை 21ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதை ஏற்று சோனியா காந்தி இன்று ஆஜராகிறார்.

இந்நிலையில், சோனியா காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளும் கட்சியினரும் நாடு தழுவிய தர்ணாவில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், அமலாக்கத் துறை விசாரணையை கணடித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா, தனது தாயார் சோனியா காந்தியின் இல்லத்திற்கு சற்று முன் வந்தடைந்தார். காங்கிரஸ் போராட்டத்தை கருத்தில் கொண்டு, சில வழித்தடங்களில் போக்குவரத்தை தவிர்க்க டெல்லி காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

"அமலாக்கத் துறை இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) போன்ற சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தும் சட்டங்களை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது" என்ற பிரச்சினையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்பதால், மக்களவையை ஒத்திவைக்கும் தீர்மானத்துக்கு காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய் நோட்டீஸ் கொடுத்தார். அதேபோல, மாநிலங்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் நோட்டீஸ் கொடுத்தார்.


Next Story