டெல்லியில் தீவிர காற்று மாசு: சமூக ஊடகத்தில் பரவும் கலகல மீம்ஸ்கள்...
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் சூழலில் அதனை கலாய்த்து சமூக ஊடகத்தில் மீம்ஸ்கள் பரவி வருகின்றன.
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று தர குறியீடு சில நாட்களாக மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியின் ஒட்டுமொத்த காற்று தர குறியீடு 431 ஆக உள்ளது என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள 1 முதல் 5 வரையிலான மாணவ மாணவிகள் படிக்கும் முதன்மை நிலை பள்ளிகளுக்கு இன்று முதல் காற்று மாசு சூழல் மேம்படும் வரை விடுமுறை விடப்படுகிறது என முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
டெல்லியில் அரசு ஊழியர்கள் 50 சதவீதம் வரை வீட்டில் இருந்து பணிபுரியும்படியான கட்டாய உத்தரவை டெல்லி சுற்றுச்சூழல் மந்திரி கோபால் ராய் அறிவித்து உள்ளார்.
டெல்லியில் 24 மணிநேரமும் காற்று மாசுபாட்டால் சாலைகளில் தெளிவற்ற வானிலை காணப்படுகிறது. இதனால், வாகனங்களில் பயணிப்பவர்கள் மெதுவாகவே செல்கின்றனர்.
சமீபத்தில், தீபாவளி நாளில் அதிக மாசுபாடுடைய நகரங்களின் வரிசையில் டெல்லி முதல் இடம் பிடித்து விட்டது என உலக காற்று தர குறியீடு அமைப்பு தெரிவித்து இருந்தது.
இந்த சூழலில், சமூக ஊடகங்களில் டெல்லியின் அவல நிலையை வெளிக்காட்டும் வகையிலான மீம்ஸ்களை நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இதன்படி, டெல்லியில் யோகா செய்வதற்கு பதில், புகைப்பது ஆரோக்கியம் தரும் என ஒருவர் தெரிவித்து உள்ளார். ஆண்கள் சிகரெட் புகைக்கிறார்கள். சிறுவர்கள் சுருட்டு புகைக்கிறார்கள் என ஒருவர் குறிப்பிட்டு உள்ளார்.
டெல்லியில் சுவாசித்த காரணத்திற்காக உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது என சாய்ந்து படுத்திருக்கும் பூனையின் புகைப்படம் ஒன்றை ஒருவர் வெளியிட்டு உள்ளார். மற்றொரு படத்தில் கண்ணை மூடி படுத்திருக்கும் பூனைக்கு பூமாலை போட்டு உள்ளனர்.
இதேபோன்று, டெல்லியில் வான்வழியே 10 நிமிடம் பறந்து சென்ற சூப்பர் மேனுக்கு ஏற்பட்ட கதி இது என ஐ.சி.யூ.வில் சூப்பர்மேன் பிராணவாயு சுவாசம் பெறும் புகைப்படம் ஒன்றை மற்றொருவர் பதிவிட்டு உள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராயின் இளவயது புகைப்படம் ஒன்றையும், அருகே இளமை பொலிவிழந்து, கைகூப்பி காணப்படும் வயது முதிர்ந்த புகைப்படம் ஒன்றையும் இணைத்து ஒருவர் வெளியிட்டு உள்ளார்.
சமீபத்தில் கூட, டெல்லியில் காற்று மாசு காரணிகளால் மக்களில் பலரும் கண் எரிச்சல், மூச்சு விடுவதற்கே சிரமம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு இலக்காகி உள்ளனர். அதிக அளவில் ஐ.சி.யூ.வில் சேரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.