அன்னபாக்ய திட்டத்திற்கு அரிசி தரமறுப்பு மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்


அன்னபாக்ய திட்டத்திற்கு அரிசி தரமறுப்பு மத்திய அரசுக்கு  எதிராக காங்கிரஸ் போராட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவமொக்கா-

சிவமொக்காவில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 கிலோ இலவச அரிசி

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு அன்னபாக்ய திட்டத்தின்படி 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. தற்போது அந்த திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. வருகிற ஜூலை 1-ந் தேதி இந்த திட்டம் அமலுக்கு வர இருக்கிறது.

இந்தநிலையில் மத்திய அரசு, கர்நாடகத்திற்கு அரிசி வழங்க மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டனர்.

காங்கிரஸ் போராட்டம்

அதன்படி சிவமொக்காவில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பி.எச்.சாலையில் உள்ள சிவப்பா நாயக் சர்க்கிளில் கூடிய காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் முன்னாள் மந்திரி கிம்மனே ரத்னாகர், முன்னாள் எம்.எல்.சி. பிரசன்ன குமார், மாவட்டகாங்கிரஸ் தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மங்களூருவில் ஹம்பன் கட்டா பகுதியில் உள்ள மணி கூண்டு சர்க்கிள் பகுதியில் முன்னாள் மந்திரி ரமநாத்ராய் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டனர்.

இதேபோல சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள அனுமந்தப்பா சர்க்கிள் பகுதியில் தம்மையா எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடந்தது. மேலும் சித்ரதுர்காவில் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பு மந்திரி டி.சுதாகர் தலைமையில் போராட்டம் நடத்தது. இதேபோல உப்பள்ளி-தார்வார், குடகு உள்பட பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

வெறுப்பு அரசியல்

அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியினர் கூறியதாவது:-

மாநில அரசின் திட்டங்களை மத்திய அரசு முடக்க பார்க்கிறது. அன்னபாக்ய திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு சார்பில் அரிசி வழங்கப்படவேண்டும். ஆனால் மத்திய அரசு அரிசிவழங்க மறுத்துள்ளது. 2 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதை எப்படி வாங்க முடியும்.

பா.ஜனதா இதுவரை அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள். இது பா.ஜனதாவின் வெறுப்பு அரசியல். இதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story