சத்தீஷ்காரில் நக்சலைட் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் பலி
பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகளை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர்.
ராய்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில், சோட்டாடோங்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கனிம சுரங்கம் உள்ளது. இந்த கனிம சுரங்கத்தை பாதுகாப்புப்படையினர் பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை சுமார் 11 மணியளவில் சுரங்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த பாதுகாப்புப்படை வீரர்கள் மீது நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
மேலும், அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகளை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர். பின்னர், பாதுகாப்புப்படையினர் மீது நக்சலைட்டுகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாதுகாப்புப் படையை சேர்ந்த கமலேஷ் சாஹு என்ற வீரர் உயிரிழந்தார். மேலும் வினய் குமார் சாஹு என்ற வீரர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து படுகாயம் அடைந்த வீரர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற நக்சலைட்டுகளை தேடும் பணியில் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்புப்படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.