பஞ்சாப் எல்லையில் பறந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப்படையினர்
எல்லையில் பறந்த ஆளில்லா விமானத்தை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.
அமிர்தசரஸ்,
பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவதை தடுக்க காஷ்மீர், பஞ்சாப் எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி கடந்த 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ஆளில்லா விமானம் (டிரோன்) ஒன்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது.
அமிர்தசரசின் சஹர்பூர் கிராமத்திற்கு அருகே பாகிஸ்தானில் இருந்து மற்றொரு ஆளில்லா விமானம் (டிரோன்) பறந்து வந்துள்ளது. அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் டிரோன் சத்தத்தை கேட்டதும் உஷாராகினர். உடனே அவர்கள் டிரோன் மீது துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.
சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் வெள்ளை நிற பாலீத்தின் பொருட்கள் கிடந்தது. அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.