காரக்பூர் ஐஐடி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை: உடல் அழுகிய நிலையில் மீட்பு
அசாம் மாநிலம் காரக்பூரில் உள்ள ஐஐடி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
காரக்பூர்,
அசாம் மாநிலம் காரக்பூரில் உள்ள ஐஐடி-ல் பைசான் அகமது என்ற 23 வயதான மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், மாணவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர் உயிரிழந்ததை அடுத்து அம்மாநில முதல் மந்திரி தன்னுடைய டுவீட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, புகழ்பெற்ற ஐஐடி காரக்பூரில் படிக்கும் டின்சுகியாவைச் சேர்ந்த இளம் மாணவர் பைசான் அகமதுவின் துரதிர்ஷ்டவசமான மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். என்று அவர் கூறியுள்ளார்.
பைசான் அகமது ஐஐடி காரக்பூரில் உள்ள மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவரது மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப மாதங்களில் இந்தியாவின் முதன்மையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகங்களில் பல தற்கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த செப்டம்பரில், ஐதராபாத் மற்றும் கான்பூரில் உள்ள ஐஐடி வளாகங்களில் இரண்டு நாட்களில் இரண்டு தற்கொலைகள் பதிவாகியுள்ளன.