19 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? - மத்திய மந்திரி பியூஷ் கோயல் விளக்கம்
மாநிலங்களவை உறுப்பினர்கள் 19 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முடிவு கனத்த இதயத்துடனேயே எடுக்கப்பட்டதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 18-ந்தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பி, முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
நேற்றும் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வுக்கு எதிரான பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 19 பேர் இந்த வாரம் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்,
விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும், இது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு பலமுறை தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார். எனினும், விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் அமைதி காக்குமாறு அவையை நடத்திய துணைத் தலைவர் ஹர்வன்ஷ் தொடர்ந்து வலியுறுத்திய போதும், அவர்கள் அவையை நடத்த விடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாகவே, அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார். இந்த முடிவு கனத்த இதயத்துடனேயே எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 பேர், திமுகவைச் சேர்ந்த 6 பேர், தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த 3 பேர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என 19 எம்பிக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.