கொல்கத்தாவில் 150 ஆண்டுகளாக இயங்கி வந்த டிராம் சேவையை நிறுத்த முடிவு


கொல்கத்தாவில் 150 ஆண்டுகளாக இயங்கி வந்த டிராம் சேவையை நிறுத்த முடிவு
x
தினத்தந்தி 29 Sept 2024 10:28 AM IST (Updated: 29 Sept 2024 1:50 PM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தாவில் 150 ஆண்டுகளாக இயங்கி வந்த டிராம் சேவையை நிறுத்த மேற்கு வங்காள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கொல்கத்தா,

இந்தியாவில் டிராம் சேவை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 1873-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கொல்கத்தாவில் குதிரைகளைக் கொண்டு தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்படும் டிராம்கள் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டன.

தொடர்ந்து பாட்னா, சென்னை, நாசிக் மற்றும் மும்பை போன்ற பிற நகரங்களில் டிராம்கள் ஓடத் தொடங்கின. பின்னர் படிப்படியாக டிராம் சேவைகள் முடிவுக்கு வந்த நிலையில், சுமார் 150 ஆண்டுகளாக கொல்கத்தாவில் மட்டும் டிராம் சேவை தொடர்ந்து இயங்கி வருகிறது.

ஆரம்ப காலத்தில் நீராவி இன்ஜின் மூலம் இயக்கப்பட்ட டிராம்கள், 1900-களில் மின்சார இன்ஜினாக மாற்றம் செய்யப்பட்டன. கடந்த 2013-ம் ஆண்டில் குளிர்சாதன வசதி கொண்ட டிராம்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கொல்கத்தாவின் அடையாளங்களில் ஒன்றாகவே டிராம் சேவை விளங்கி வருகிறது.

இந்த நிலையில், சுமார் 150 ஆண்டுகளாக இயங்கி வந்த டிராம் சேவையை நிறுத்த மேற்கு வங்காள மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநில போக்குவரத்து துறை மந்திரி ஸ்நேகாசிஸ் சக்ரபோர்த்தி கூறுகையில், டிராம்களின் மெதுவான வேகம் காரணமாக சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக எஸ்பிளனேட்-மைதான் வழித்தடத்தில் இயங்கும் டிராம் சேவையை தவிர, மற்ற அனைத்து வழித்தடங்களில் இயங்கி வரும் டிராம் சேவைகளை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், போக்குவரத்து நெரிசலுக்கு டிராம் மட்டுமே காரணம் என்று கூற முடியாது எனவும், சாலைகளின் தரமும் உயர்த்தப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story