பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஹெப்பால் மேம்பாலத்தை 10 வழிப்பாதையாக மாற்ற முடிவு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அனுமதி
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஹெப்பால் மேம்பாலத்தை 10 வழிப்பாதையாக மாற்ற முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அனுமதி வழங்கி உள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பாதையாக ஹெப்பால் மேம்பாலம் உள்ளது. இதன் காரணமாக அந்த மேம்பாலத்தில் எந்த நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஹெப்பால் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தவிர்க்க மாநகராட்சி, பெங்களூரு வளர்ச்சி ஆணையம், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள். ஆனால போக்குவரத்து நெரிசல் பிரச்சினை மட்டும் தீர்ந்தபாடில்லை. இந்த நிலையில், ஹெப்பால் மேம்பாலத்தை விரிவுபடுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதாவது ஹெப்பால் மேம்பாலத்தை 10 வழிப்பாதையாக மாற்ற மாநகராட்சி தீர்மானித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு ஹெப்பால் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, அதை 10 வழிப்பாதையாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதனால் கூடிய விரைவில் மேம்பால விரிவாக்க பணிகளை மேற்கொள்ள பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் டெண்டர் விடப்பட இருக்கிறது. ஹெப்பால் மேம்பாலத்தின் கீழ் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்க பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.