பெங்களூருவில் 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 சுரங்க பாதைகள் - மந்திரி சதீஸ் ஜார்கிகோளி பேட்டி
போக்குவரத்து நெரிசலை குறைக்க பெங்களூருவில் 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 சுரங்க பாதைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை மந்திரி சதீஸ் ஜார்கிகோளி கூறியுள்ளார்.
பெங்களூரு, ஜூன்.28-
போக்குவரத் நெரிசல்
மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரியை பொதுப்பணித்துறை மந்திரி சதீஸ் ஜார்கிகோளி டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது அவர், கர்நாடகத்தில் பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்புக்கு பிறகு சதீஸ் ஜார்கிகோளி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நகரின் 4 திசைகளையும் இணைக்கும் வகையில் சுரங்க பாதை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த வரைவு திட்டத்தை மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் தாக்கல் செய்து அவற்றுக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளேன். மெட்ரோ சுரங்க பாதையை போல் 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு தலா 3 வழிப்பாதைகளை கொண்ட சுரங்க சாலைகள் அமைக்கப்படும்.
சுரங்க பாதை
இதில் ஒரு சுரங்க பாதை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கும், இன்னொரு பாதை 22 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அமையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நிதின் கட்காரி ஆர்வம் காட்டியுள்ளார். சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் ஹெப்பால் மேம்பாலத்தில் கூடுதலாக ஒரு சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
கர்நாடகத்தில் உள்ள 38 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்துமாறு நிதின் கட்காரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.