நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஆகஸ்டு 8-ந்தேதி விவாதம்..! 10-ந்தேதி பிரதமர் மோடி பதில்
மணிப்பூர் விவகாரம் தொடர்பான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஆகஸ்டு 8-ந்தேதி விவாதம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ந்தேதி, இரு அவைகளிலும் தொடங்கியது. அவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றம் இன்றுவரை முடங்கியுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என கோரி எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் கொண்டு வந்தன.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்றாலும், அந்த தீர்மானம் மீது மத்திய அமைச்சரவை தலைவர் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்பது நடாளுமன்ற விதி. மக்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டாலும் விவாதம் எப்போது நடைபெறும் என அறிவிக்காமல் இருந்து வந்தார்.
தற்போது மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் எப்போது நடைபெறும்? என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 8-ந்தேதி இதன் மீதான விவாதம் நடைபெறும் எனவும், விவாதத்திற்கு பிறகு வரும் 10-ந்தேதி பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.