'எக்ஸ்' வலைதளத்தில் போலி கணக்குகளை முடக்க கால அவகாசம்
‘எக்ஸ்’ வலைதளத்தில் போலி கணக்குகளை முடக்க கால அவகாசம் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
போலி கணக்குகள்
நாட்டில் பயன்படுத்தப்படும் முக்கிய சமூக வலைதளங்களில் எக்ஸ் வலைதளமும்(டுவிட்டர்) ஒன்றாகும். அந்த வலைதள பக்கங்களில் அரசியல் பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் கணக்குகளை வைத்துள்ளனர். இந்த நிலையில் எக்ஸ் வலைதள பக்கத்தில் பல்வேறு போலி கணக்குகள் நடமாட்டம் இருப்பதாகவும், அவற்றால் நாட்டின் பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து போலி வலைதள கணக்குகளை முடக்குமாறு, அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. ஆனால் அந்த பரிந்துரையை எக்ஸ் நிறுவனம் முறையாக கடைபிடிக்காமல் இருந்தது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக எக்ஸ் நிறுவனம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு கூறியபடி போலி வலைதள கணக்குகளை முடக்கவும், அதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
கால அவகாசம்
அந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் எக்ஸ் நிறுவனம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதுதொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கு தொடர்பான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி நரேந்திரா மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது எக்ஸ் நிறுவன வலைதளத்தில் உள்ள போலி கணக்குகளை முடக்குவது தொடர்பான உத்தரவை மறுஆய்வு செய்ய அக்டோபர் 4-ந் தேதி வரை கால அவசாகம் கொடுப்பதாக கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.