ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்கும் டேனிஷ் அலி எம்.பி.


ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்கும் டேனிஷ் அலி எம்.பி.
x
தினத்தந்தி 14 Jan 2024 4:48 PM IST (Updated: 14 Jan 2024 6:05 PM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தியின் யாத்திரையில் சேராவிட்டால், தனது கடமையை செய்யத் தவறியவன் ஆகிவிடுவேன் என டேனிஷ் அலி தெரிவித்துள்ளார்.

இம்பால்,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' என்ற பெயரில் நடைபெறும் இந்த யாத்திரை மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது.

15 மாநிலங்களில் 6,713 கி.மீ. தூரம் நடைபெறும் இந்த யாத்திரை 67 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்கிறார்கள்.


இதனிடையே பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த டேனிஷ் அலி எம்.பி., சமீபத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி, இவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து உத்தரவிட்டார். கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் டேனிஷ் அலி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக டேனிஷ் அலி எம்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இன்று ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன். இது எனக்கு ஒரு முக்கியமான முடிவு.

எனக்கும் எனது மதத்துக்கும் எதிராக ஆளும்கட்சி உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசிய அவதூறான வார்த்தைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன். என்னை தாக்கி பேசியவரை தண்டிப்பதற்கு பதிலாக, ஆளும் கட்சி அவருக்கு வெகுமதி அளித்தது. எனது கடினமான நேரத்தில் எனக்கு ஆதரவு தெரிவித்த முதல் தலைவர் ராகுல் காந்திதான்.

ராகுல் காந்தியின் யாத்திரையின் நோக்கம், அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். ஒற்றுமை மற்றும் நீதிக்கான மிகப்பெரிய யாத்திரையில் நான் சேராவிட்டால், அரசியல்வாதியாகவும், சமூக சேவகனாகவும் எனது கடமையை நான் செய்யத் தவறிவிடுவேன் என்று கருதுவதால் அவருடன் இந்த யாத்திரையில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளேன். இந்த யாத்திரை வெற்றியடையவும், எனது நாட்டின் எதிர்காலத்திற்காகவும் பிரார்த்திக்கிறேன்."

இவ்வாறு டேனிஷ் அலி தெரிவித்துள்ளார்.


Next Story