மகாத்மா காந்தி சிலை சேதம்: முதல்-மந்திரி சித்தராமையா கடும் கண்டனம்
சிவமொக்காவில் மகாத்மா காந்தி சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியதற்கு முதல்-மந்திரி சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு-
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி அருகே ஒலேஒன்னூரில் மகாத்மா காந்தி சிலை மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
காந்தி சிலையை சேதப்படுத்திய தேசவிரோத செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த மண்ணின் சுதந்திர போராட்டத்தின் பின்னணி, அரசியல் சாசனம், சட்டத்தின் மீது எந்த மரியாதையும் இல்லாதவர்களால் தான் இதுபோன்ற கேவலமான செயலை செய்ய முடியும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதை நினைத்து யாரும் பதற்றம் அடைய வேண்டாம். சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம். அனைவரும் அமைதியும், சட்டம்-ஒழுங்கையும் நிலைநாட்ட பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.