இந்தியர்கள் அன்பு மிக்கவர்கள், சீன அதிகாரிகள் செயற்கைத் தனமானவர்கள் ; தலாய் லாமா


இந்தியர்கள் அன்பு மிக்கவர்கள், சீன அதிகாரிகள் செயற்கைத் தனமானவர்கள் ; தலாய் லாமா
x

சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவில் மரணம் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

திபெத்தில் டக்ஸ்டர் என்ற கிராமத்தில் (1935) பிறந்தவர் தலாய் லாமா. இயற்பெயர் லாமொ தொண்டுப். 14-வது தலாய் லாமாவாக 1950-ல் முறைப்படி பொறுப்பேற்றார். திபெத்திய புத்த மதத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவரைக் குறிப்பிடும் பெயர்தான் 'தலாய் லாமா'. தங்களது மரபு வழித் தலைவராக திபெத் மக்கள் இவரை ஏற்றுக்கொண்டனர். ஆனால், திபெத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா இதை ஏற்கவில்லை.

சீனத் தலைவர்களுடன் 1956-ல் பேச்சுவார்த்தை நடத்தினார். திபெத்தை தனி நாடாக அங்கீகரிக்க சீனா தயாராக இல்லை. 1959-ல் திபெத் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தஞ்சம் புகுந்தார். அது முதல் இந்தியாவில் தான் இருந்து வருகிறார். தொடர்ந்து திபெத்துக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்று சீனாவிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால், சீனாவோ இது சம்பந்தமாக பேச்சு நடத்த தயாராக இல்லை. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமா, இளைஞர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது;

இந்தியர்கள் அன்பு மிக்கவர்கள். அவர்களிடம் செயற்கைத்தனம் ஏதும் இல்லை. அதனால் இந்திய மக்கள் மத்தியிலேயே மரணமடைய விரும்புகிறேன். மாறாக, செயற்கைத்தனம் நிறைந்த சீன அதிகாரிகள் மத்தியில் இறக்க விரும்பவில்லை.

சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவில் மரணம் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, பேஸ்புக்கில் தலாய் லாமா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உண்மையாகவே வருந்தக்கூடிய நம்பிக்கையான நண்பர்கள் மத்தியில் தான் ஒரு மனிதர் உயிரிழக்க வேண்டும்"என்றார்.


Next Story