தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்தது - மீண்டும் வேகம் எடுக்கக்காரணம் என்ன?
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்தது. இது 6 மாதங்களில் அதிகபட்ச பாதிப்பு ஆகும்.
புதுடெல்லி,
நமது நாட்டில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிரடி ஏற்றத்தைக் கண்டு வருகிறது. நேற்று முன்தினம் 2,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. நேற்று இது அதிரடியாக 3 ஆயிரத்தைக் கடந்தது. 24 மணி நேரத்தில் 3,016 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 மாதங்களில் இது அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.
இதனால் தொற்று பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ளது.
8 மாநிலங்களில் அதிகம்
3 இலக்க எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பை நேற்று 8 மாநிலங்கள் சந்தித்துள்ளன. அவை, கேரளா, மராட்டியம், கர்நாடகம், குஜராத், டெல்லி, அரியானா, இமாசலபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகும்.
நேற்று முன்தினம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 522 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
6 பேர் பலி
தொற்றின் பிடியில் இருந்து நேற்று 1,396 பேர் மீண்டுள்ளனர். இதுவரையில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 68 ஆயிரத்து 321 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றால் நேற்று மராட்டியத்தில் 3 பேரும், டெல்லியில் 2 பேரும், இமாசலபிரதேசத்தில் ஒருவரும் இறந்த நிலையில், கேரளாவில் விடுபட்ட இறப்புகளில் 8-ஐ கணக்கில் கொண்டுவந்தனர். இதனால் தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது.
அதிகரிக்க காரணம் என்ன?
தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 1,606 அதிகரித்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 509 ஆக உள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கக்காரணம், புதிய வகை எக்ஸ்பிபி.1.16 வைரஸ்கள்தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வகை வைரஸ்கள் மிக வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளன.
இந்த வைரஸ், தடுப்பூசி மற்றும் கொரோனா தொற்றின் மூலம் அடையப்பட்ட கலப்பு நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறனை கொண்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்த தொற்று பாதிப்பால் 48 மணி நேரத்துக்கு கடுமையான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த வைரஸ் பாதிப்பால் மக்களுக்குப் பெரிய அளவில் தீங்கு ஏற்படுவதாக தகவல் இல்லை.