பிபர்ஜாய் புயல்: குஜராத்தில் பலத்த காற்று, கனமழைக்கு மத்தியில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி


பிபர்ஜாய் புயல்: குஜராத்தில் பலத்த காற்று, கனமழைக்கு மத்தியில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி
x

குஜராத்தில் பலத்த காற்று, கனமழை என பிபர்ஜாய் புயலுக்கு மத்தியில் மீட்கப்பட்ட கர்ப்பிணி குழந்தை பெற்றெடுத்து உள்ளார்.

வதோதரா,

அரபிக்கடலில் 10 நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே மாலை 6.30 மணி முதல் கரையை கடந்தது.

புயல் கரையை கடந்தபோது 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால், குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. 1000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

600 மரங்கள் வேருடன் சய்ந்தன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. காற்றில் அடித்து செல்லப்பட்டும், மரங்கள் விழுந்தும் பல வீடுகள் சேதமடைந்தன.

இந்த நிலையில், மாண்டவி பகுதியில் கர்ப்பிணி ஒருவர் சிக்கலான நிலையில் இருந்து உள்ளார். அவருக்கு பிரசவ வலி எந்த நேரமும் ஏற்பட கூடிய நிலை இருந்தது. இதன்பின் அவர் மாண்டவி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரசவம் நடந்தது.

இதுபற்றி அந்த மருத்துவமனையின் டாக்டர் துருவ் கூறும்போது, மிக சிக்கலான நிலையில் ஒரு கர்ப்பிணி இருக்கிறார் என எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 35 கி.மீ. தொலைவில் இருந்த அவர், மருத்துவமனையை வந்து அடைவதற்கு 3 மணிநேரத்திற்கும் கூடுதலாக நேரம் ஆனது.

இது நிலைமையை இன்னும் சிக்கலாக்கியது. உள்ளூரில் மயக்க மருந்து வசதி இல்லாத சூழலில், அவர்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து உள்ளனர். இதனாலேயே சிக்கல் அதிகரித்து உள்ளது. அறுவை சிகிச்சை செய்தே குழந்தை பிறக்க கூடிய சூழல் இருந்தபோதும், அறுவை சிகிச்சையின்றி பிரசவம் மேற்கொண்டோம். தாய் மற்றும் சேய் நலமுடன் உள்ளனர்.

கடந்த 2 நாட்களில், பிபர்ஜாய் புயல் சூழ்ந்த சூழலில், இதுபோன்று 45 நோயாளிகள் வந்து உள்ளனர். கடந்த 2 முதல் 3 நாட்களாக இதுபோன்று நிறைய பேர் வந்து உள்ளனர் என கூறுகிறார்.


Next Story