செல்போன்கள் மூலம் நூதன மோசடி; பொதுமக்கள் கருத்து


செல்போன்கள் மூலம் நூதன மோசடி; பொதுமக்கள் கருத்து
x

செல்போன்கள் மூலம் நூதன மோசடி நடப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

ஹலோ... உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வேண்டுமா? வீடு-மனை வேண்டுமா? நகைக்கடன் தேவையா?... என்பது போன்ற தகவல்கள் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாகவும், அழைப்புகளாகவும் அன்றாடம் வருகின்றன. ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து பேசுகிறோம், 'உங்களால் முடிந்த பண உதவிகளை இந்த வங்கி கணக்கில் செலுத்துங்கள்' என்பது போன்ற அழைப்புகளும் அடிக்கடி வருகின்றன. 'பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களின் மிக அருகே குறைந்த விலையில் சகல வசதிகளுடன் வீட்டுமனை. உடனே முந்துங்கள்' போன்ற குரல் பதிவு அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.

அதுமட்டும் அல்ல வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு விவரங்களை பெற்று, செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை வாங்கி அப்பாவி மக்களிடம் நூதன முறையில் பணம் பறிக்கும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன.

அதேபோன்று 'உங்கள் செல்போன் எண்ணுக்கு மெகா பரிசு விழுந்துள்ளது. இந்த லிங்கை திறந்து பாருங்கள்' என்று குறுந்தகவல் அனுப்பி அதன் மூலம் ஒரு நொடியில் வங்கி கணக்கில் இருந்து பணம் 'அபேஸ்' செய்யப்படுகிறது.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பர்னிச்சர் கடை உரிமையாளர் கார்த்திகேயன் 'ஆன்லைன்' பண மோசடி கும்பல் அனுப்பிய லிங்கை தொட்டு ரூ.65 ஆயிரத்தை பறிகொடுத்தார். அவரிடம் 'ஆன்லைன்' மூலம் சோபா, மேஜை, கட்டில் வாங்குவதாக கூறி இந்த நூதன மோசடி அரங்கேறியது.

விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப 'சைபர்' குற்றங்களும் புதுப்புது வடிவங்கள் எடுத்து வருகின்றன. 'சைபர்' குற்றங்களை தடுப்பது போலீசாருக்கு சவாலாக இருக்கிறது. இதுபோன்ற அழைப்புகள், மோசடி குறுந்தகவல்கள் முதலில் மனதை மயக்குவதாக இருந்தாலும் இறுதியில் மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன.

இதுகுறித்து பொதுமக்களின் ஆதங்கம் வருமாறு:-

பணத்தை இழப்பவர்கள் படித்தவர்களே

பெங்களூருவை சேர்ந்த வக்கீல் பாலாஜி சிங் கூறுகையில், "நாட்டில் சமீபகாலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. அடையாளம் தெரியாத நபர் நமது செல்போனில் தொடர்பு கொண்டு ரகசிய குறியீட்டு எண்களை கேட்பதும், நமது வங்கி கணக்கு விவரங்களை கேட்பதும், அதை பெற்று நமது கணக்கில் இருந்து பணத்தை திருடி கொள்வதும் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக தற்போது வயதானவர்கள், வாலிபர்களிடம் மயக்கும் குரலில் பெண்கள் மூலம் பேச வைத்தும் பண மோசடிகள் அதிகளவில் நடந்து வருகிறது. இதில் விசேஷம் என்னவென்றால், இந்த தவறை செய்கிறவர்களும் படித்தவர்களே, பணத்தை இழப்பவர்களில் பெரும் பகுதியினர் படித்தவர்களே. இந்த திருட்டு சம்பவங்களை தடுக்க அரசால் முடியும். சைபர் குற்றங்களை கையாள போலீஸ் துறையில் தனியாக சைபர் குற்ற பிரிவே இயங்கி வருகிறது. இதன் மூலம் சைபர் குற்றங்களை குறிப்பாக வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் சம்பவங்களை தடுக்க முடியும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

பெங்களூரு ஆஸ்டின் டவுனை சேர்ந்த இல்லத்தரசி சரஸ்வதி கூறும்போது, "சமீப காலமாக அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து அதிகளவில் செல்போன் அழைப்புகள் வருகின்றன. நாம் எங்காவது பரபரப்பாக இருப்போம். அந்த நேரத்தில் நமக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து அழைப்பு வரும். நாம் அதில் பேசினால், மறுமுனையில் இருப்பவர், தங்கள் நிறுவனம் குறித்த விஷயங்களை எடுத்து சொல்வார்கள். தனிநபர் கடன் வேண்டுமா?, கிரெடிட் கார்டு வேண்டுமா? என்று கேட்டு எரிச்சலை ஏற்படுத்துவார்கள். ஒரு சிலர் வங்கி கணக்கு விவரங்கள், ஓ.டி.பி. எண் கூறுமாறு கேட்பது உண்டு. ஆனால் இந்த விஷயத்தில் நான் எச்சரிக்கையாக இருப்பேன். எனது வங்கி விவரங்களை யார் கேட்டாலும் கொடுக்க மாட்டேன். அதே போல் என்னை போன்ற பொதுமக்கள், அடையாளம் தெரியாத நபர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் வங்கி விவரங்கள், ஓ.டி.பி. போன்ற எண்களை கேட்டால் தரக்கூடாது. இந்த விஷயத்தில் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.

புதுப்புது வழியில் ஆபத்து

மங்களூரு நாகுரி பகுதியை சேர்ந்த சக்திநாதன் கூறுகையில், "நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூகுள்பே மூலம் எனது நண்பர் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் அனுப்ப முயன்றேன். அப்போது தவறுதலாக மற்றொருவருக்கு சென்றுவிட்டது. அந்த நபரை தொடர்பு கொண்டு கேட்டும் அவர் திரும்ப தரவில்லை. பின்னர் கூகுள் பே வாடிக்கையாளர் சேவை எண் மற்றும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தேன். இருப்பினும் நீண்ட ேபாராட்டத்திற்கு பிறகே எனது பணம் எனக்கு திரும்ப கிடைத்தது. இதற்கே இந்த நிலை என்றால், பரிசு விழுந்து இருப்பதாகவும், ஆசையை தூண்டும் விதமாக குறுஞ்செய்தியுடன் லிங் அனுப்பியும் மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் பெங்களூரு, மங்களூரு போன்ற பெருநகரங்களில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலை குறையும் என நவீன செல்போன்களையும், செயலிகளையும் பயன்படுத்த தொடங்கினோம். ஆனால் அந்த நவீன தொழில்நுட்பங்களால் நமக்கு புதுப்புது வழியில் ஆபத்து நெருங்கி வருகிறது என்பதை உணர்ந்து நாம் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றார்.

சிவமொக்கா வினோபா நகரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சரிதா கூறுகையில், "சமீப காலமாக நாட்டில் பலரின் செல்போனில் இருந்த வங்கிக் கணக்குகள் திருடப்பட்டு பணத்தை இழந்தது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசில் வழக்குகள் குவிந்து கிடக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் போது தேவையில்லாத குறுந்தகவல்களுக்கு நாம் பதில் கொடுப்பது தான். ஆசையை தூண்டும் வகையில் உங்களுக்கு போனஸ் வந்துள்ளது, 50 சதவீத தள்ளுபடி விலையில் இந்தப் பொருள் விற்கப்படுகிறது என்று செல்போன் அழைப்பு மற்றும் குறுந்தகவல்கள் மூலமும், ரம்மி சூதாட்டம் விளையாட தயாராக இருங்கள் உங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் போனஸ் வந்துள்ளது, உங்களுடைய ஏ.டி.எம். கார்டு காலாவதி ஆகிறது என கூறி புதுப்புது வழிகளில் மோசடிகள் நடைபெறுகிறது. எனவே பரிசு விழுந்து இருப்பதாகவோ அல்லது கடன் தருகிறோம், கிரெடிட் கார்டு தருகிறோம் என மனதை தூண்டும் வகையில் வரும் செல்போன் அழைப்புகளுக்கோ அல்லது குறுஞ்செய்திகளுக்கோ நாம் அவசரப்பட்டு பதில் அளிக்கக் கூடாது. இதுபோன்ற தேவையற்ற அழைப்புகளை புறக்கணிக்க வேண்டும்" என்றார்.

கடுமையான சட்டங்கள்

மைசூரு மாவட்ட விவசாய சங்கத் தலைவர் படகலபுரா மகேந்திரா கூறுகையில், "லட்சக்கணக்கான ரூபாய் பரிசு வந்திருப்பதாகவும், விலைமதிப்புள்ள பொருட்கள் வந்திருப்பதாகவும், திருமண செய்து கொள்வதாகவும், வீடு, நிலம், போன்ற சொத்துக்கள் விற்பனைக்கு அல்லது வாடகைக்கு இருக்கிறது என்றும் ஆன்லைனில் ஆசை காட்டி வங்கி எண்கள், ஏ.டி.எம். கார்டு எண்கள், ரகசிய குறியீட்டு எண், ஓ.டி.பி. எண் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வங்கி கணக்கில் இருந்து நொடிப் பொழுதில் பணத்தை அபேஸ் செய்து விடுகிறார்கள். பின்னர் அந்த நபர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போகிறது. மைசூரு மாவட்டம் உள்பட மாநிலம் முழுவதும் ஆசைப்பட்டு பலரும் பணத்தை இழந்து பரிதவித்து வருகிறார்கள். இந்த மாதிரி மோசடி செய்யும் கும்பலை கண்டுபிடித்து போலீஸ் நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்கு அரசு புதிய சட்டம் அமல்படுத்த வேண்டும்" என்றார்.

கோலார் தங்கவயல் மாரிக்குப்பம் பிராக் அண்டு கோ பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சஞ்சு கூறுகையில், "நேற்று (அதாவது நேற்று முன்தினம்) எனது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எனவே நான் அனுப்பியுள்ள லிங்க் http://bitly.ws/B9KD என்ற லிங்க்கை தொடர்பு கொள்ளவும் என்று இருந்தது. நான், உடனே எனது செல்போனை எடுத்து எனது வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள பேடிஎம் என்ற செயலிக்குள் சென்று எனது கணக்கில் உள்ள இருப்பு தொகையை பார்த்தேன். அப்போது எனது வங்கி கணக்கு முடக்கவில்லை என்பதை தெரிந்துகொண்டேன். அப்போது தான் இவர்கள் மோசடிக்காரர்கள் என்பது தெரியவந்தது. உடனே எனக்கு குறுந்தகவல் அனுப்பிய எண்ணிற்கு தொடர்பு கொண்டேன். ஆனால் அவர்கள் எனது அழைப்பை ஏற்கவில்லை. இதுபோன்று பல வழிகளில் மோசடி கும்பல்கள் செல்போனில் பேசியும், குறுந்தகவல்கள் மூலமாக நமக்கு ஆசை வலையை விரித்து வருகிறார்கள். அதில் நாம் சிக்காமல் இருக்க வேண்டும். இதுபோன்ற மோசடி கும்பலுக்கு நமது செல்போன் எண்கள் எங்கே இருந்து கிடைக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் பயன் இருந்தாலும் இதுபோன்ற நூதன மோசடிகளும் நம்மை சுரண்டி பார்க்க வரிசை கட்டி நிற்கிறது. இதை தடுக்க கடும் சட்டம் கொண்டு வர வேண்டும்" என்றார்.

பணத்தை இழக்க வேண்டாம்

கோலார் தங்கவயல் சாம்பியன் பகுதியில் உள்ள ஆஸ்பிட்டல் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த டென்னிஸ் கூறுகையில், "குறைந்த வட்டிக்கு உடனுக்குடன் ஆவணங்கள் இன்றி கடன் கொடுப்பதாக செல்போனுக்கு தகவல்கள் வருகின்றன. அதை நம்பிய எனது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் அவர்கள் அனுப்பிய ஆன்லைன் லிங்க்கிற்குள் சென்று விண்ணப்பித்தனர். எதிர் முனையில் அழைத்த நபர் உங்களுக்கு கடன் தேவையென்றால் உங்களின் ஏ.டி.எம். அட்டையின் மேல் உள்ள 16 எண்களை கூறவும் என்று கூறியுள்ளார். உடனே அவர்களும் ஏ.டி.எம். அட்டையின் மீதுள்ள 16 இலக்க எண்களை கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் அந்த மர்மநபர் தற்போது உங்களுக்கு வரும் ஒரு முறை பயன்படுத்தும் (ஓ.டி.பி) எண்ணை தனக்கு தெரிவிக்கும் படி கூறினார். அதன்படி எனது நண்பர்கள் அந்த எண்ணை கூறியுள்ளனர்.

சிறிது நேரத்தில் எனது நண்பர்கள் வங்கி சேமிப்பு கணக்கில் வைத்திருந்த பணம் அனைத்தும் அபேஸ் செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் பாதித்தவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து இழந்த பணத்தை மீண்டும் பெற்றனர். இருப்பினும் இதுபோன்று ஆசை வார்த்தைகளை கூறி வரும் தகவல்களை நம்பி யாரும் பணத்தை இழக்க வேண்டாம்" என்றார்.


Next Story