கரன்சி நோட்டு, நாணயங்களில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக புதிய அம்சங்கள்; பிரதமர் மோடி


கரன்சி நோட்டு, நாணயங்களில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக புதிய அம்சங்கள்; பிரதமர் மோடி
x

கரன்சி நோட்டுகள் மற்றும் நாணயங்களில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன என பிரதமர் மோடி இன்று பேசி உள்ளார்.



மைசூரு,



கர்நாடகாவின் மைசூரு நகரில் உள்ள நாகனஹள்ளி ரெயில் நிலையத்தில் அனைத்து இந்திய வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதோருக்கான பயிற்சி மையத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி இன்று நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கர்நாடக கவர்னர் தாவர் சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி பிரகலாத் ஜோஷி மற்றும் பிரதாப் சிம்ஹா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களை சார்ந்து இருக்கும் நடைமுறையை குறைப்பதற்கான முயற்சிகளை நமது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நம்முடைய கரன்சி நோட்டுகள் மற்றும் நாணயங்களில், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அவர்களது கல்வி சார்ந்த பாடத்திட்டங்களின் தரமும் மேம்படுத்தப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 8 ஆண்டுகளில் 5 ஆயிரம் கி.மீ. அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு ரூ.70 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. பெங்களூருவில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு கூடுதலான மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.


Next Story