காங்கிரஸ் கட்சி பொய்யான உத்தரவாத அட்டையை வழங்குகிறது; சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி


காங்கிரஸ் கட்சி பொய்யான உத்தரவாத அட்டையை வழங்குகிறது; சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி
x

காங்கிரஸ் கட்சி பொய்யான உத்தரவாத அட்டையை வழங்குவதாக சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

விஜாயப்புரா:

காங்கிரஸ் கட்சி பொய்யான உத்தரவாத அட்டையை வழங்குவதாக சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. விஜாயப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஓட்டு கேட்கிறோம்

பா.ஜனதாவில் தலைவர்கள் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து உயர்ந்த நிலையை எட்டுகிறார்கள். இது ராஜீவ்காந்திக்கும் தெரியும். காங்கிரசில் டி.என்.ஏ. அடிப்படையில் தலைவர்கள் உருவாகிறார்கள். நாங்கள் எங்கள் மத்திய-மாநில ஆட்சிகளின் சாதனை அடிப்படையில் மக்களிடம் ஓட்டு கேட்கிறோம். கர்நாடகத்தில் பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் ஏரிகள் நிரப்பும் திட்டம் நிராகரிக்கப்பட்டது. பா.ஜனதா ஆட்சியில் தான் ஏரிகள் நிரப்பும் செயல்படுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் உத்தரவாத அட்டையை வினியோகம் செய்கிறார்கள். ஆனால் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிவடைந்துவிட்டது.

பொய்யான உத்தரவாதம்

எல்லா இடங்களிலும் காங்கிரஸ் நிராகரிக்கப்படுகிறது. அதனால் இங்கு உத்தரவாத அட்டை கொடுத்து என்ன பயன்?. இது பொய்யான உத்தரவாத அட்டை என்று மக்களுக்கு தெரியும். இதற்கு எதிராக நாங்கள் செய்த பணிகள் குறித்த அட்டையை வழங்குவோம். சித்தராமையா என்ன சொன்னாலும் அதற்கு எதிராகவே நடக்கிறது. மோடி பிரதமராக மாட்டார் என்றும், எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரி ஆக மாட்டார்கள் என்றும் முன்பு அவர் கூறினார். ஆனால் மோடி பிரதமரானார், எடியூரப்பா முதல்-மந்திரியானார். அதனால் கர்நாடகத்தில் பா.ஜனதா தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

திப்பு சுல்தானை கொன்றவர்கள் உரிகவுடா, நஞ்சேகவுடா. அவர்களுக்கு கவுரவம் வழங்கும் நோக்கத்தில் மண்டியாவில் உரிகவுடா, நஞ்சேகவுடா நுழைவு வாயில் வைத்தோம். அதை அகற்றியுள்ளனர். இது சரியல்ல. மண்டியாவில் பா.ஜனதா வெற்றி பெற்றால் அங்கு நிரந்தரமாக நுழைவு வாயில் வைப்போம்.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.


Next Story