கிரிப்டோகரன்சிகள் பெரிய ஆபத்து - ரிசர்வ் வங்கி கவர்னர்


கிரிப்டோகரன்சிகள் பெரிய ஆபத்து - ரிசர்வ் வங்கி கவர்னர்
x
தினத்தந்தி 30 Jun 2022 2:28 PM GMT (Updated: 30 Jun 2022 2:30 PM GMT)

கிரிப்டோகரன்சிகள் நிதி ஸ்திரத்தன்மைக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கிரிப்டோகரன்சிகள் ஒரு தெளிவான ஆபத்து, நிதி ஸ்திரத்தன்மைக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) இன்று வெளியிட்ட 'நிதி நிலைத்தன்மை அறிக்கையின் (எப்.எஸ்.ஆர்)' முன்னுரையில் கவர்னர் சக்திகாந்த தாஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, நாட்டில் உள்ள நல்ல நிர்வாகம் மற்றும் இடர் மேலாண்மை நடைமுறைகள் ஆகியவற்றால் கடுமையான அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளையும் தாங்கும் வகையில், வங்கிகள் நல்ல நிலையில் உள்ளன.

நிதி அமைப்பில், டிஜிட்டல் மயமாக்கப்படுவதால் இணைய அபாயங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் இதில் சிறப்பு கவனம் தேவை என்று கூறினார்.

ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களுக்கு, கிரிப்டோகரன்சிகள் மூலதனக் கணக்கு ஒழுங்குமுறையை சிதைக்கலாம். இது மாற்று விகித நிர்வாகத்தை பலவீனப்படுத்தலாம்.

மேலும், கிரிப்டோகரன்சிகள் முறையான நிதி அமைப்பில் இருந்து பிரிந்து, நிதி நிலைத்தன்மையை பாதிக்கலாம்.

சமீபத்திய ஆண்டுகளில் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களில், குறிப்பாக நிலையற்ற மாற்று விகிதங்களைக் கொண்ட நாடுகளில் கிரிப்டோ சொத்துக்கள் பிரபலமடைந்துள்ளன.

அதிக அளவிலான உலகளாவிய கடன், பணவியல் கொள்கை இறுக்கம், கிரிப்டோகரன்சி சுற்றுச்சூழல் அமைப்புடன் தொடர்புடைய அபாயங்கள், காலநிலை தொடர்பான அபாயங்கள் மற்றும் புவிசார் அரசியல் மோதல்கள் ஆகியவற்றால் உலகளாவிய நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் வருமான வரி சார்ந்த சில விதிமுறைகள் மாற்றப்பட்டு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.

அதன்படி, ஜூலை 1ஆம் தேதி முதல் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீதம் டிடிஎஸ் பிடித்துக்கொள்ளப்படும். கிரிப்டோகரன்சி மட்டுமல்லாமல் என்.எப்.டி போன்ற டிஜிட்டல் சொத்துகள் பரிவர்த்தனைக்கும் 1 சதவீதம் டிடிஎஸ் வசூலிக்கப்படும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையால் லாபம் கிடைத்தாலும், நஷ்டம் அடைந்தாலும் 1 சதவீதம் நிச்சயமாக பிடித்துக்கொள்ளப்படும்.

இதன் மூலம் நாளை முதல் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் பலருக்கும் கூடுதலாக கட்டணம் விதிக்கப்படலாம், அபராதமும் விதிக்கப்படலாம்.மேலும் வருமானத்தில் வரி செலுத்த வேண்டியிருக்கும்.


Next Story