மும்பையில் அமித்ஷா வருகையின் போது பாதுகாப்பில் குளறுபடி
மும்பையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வந்த போது அவரது பாதுகாப்பில் குளறுபடி நடந்தது தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வாலிபர் ஒருவரை கைது செய்து உள்ளனர்.
மும்பை,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக மும்பை வந்தார். அவர் திங்கள் கிழமை மும்பையில் லால்பாக்ராஜா விநாயகரை தரிசனம் செய்தார். மேலும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வீடுகளுக்கும் சென்றார். இதேபோல அவர் பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர்களையும் சந்தித்து பேசினார். இந்தநிலையில் அமித்ஷா மும்பை வந்து இருந்த போது அவரது பாதுகாப்பில் குளறுபடி நடந்தது தெரியவந்து உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி. என மோசடியில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து உள்ளனர். அமித் ஷா மும்பை வந்து இருந்த போது அவருடன் வெள்ளை நிற சட்டை, நீல நிற கோர்ட்டு அணிந்து வாலிபர் ஒருவர் அவருடன் சுற்றிக்கொண்டு இருந்தார். மேலும் முக்கிய அரசியல் தலைவர்களுடனும் காணப்பட்டார். வித்தியாசமான ஒரு நபர் அமித்ஷா, முக்கிய தலைவர்களுடன் காணப்பட்டது மூத்த மந்திராலயா அதிகாரி ஒருவருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரி அவரிடம் விசாரித்து உள்ளார். அப்போது அந்த வாலிபர், அவரது பெயர் ஹேமந்த் பவார் எனவும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி. ஒருவரின் உதவியாளர் என கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபரின் கழுத்தில் மத்திய உள்துறையின் ரிப்பன் தொங்கவிடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த மந்திராலயா அதிகாரி சம்பவம் குறித்து மலபார்ஹில் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் மும்பையில் அமித்ஷாவின் நிகழ்ச்சிகள் முடிந்த 3 மணி நேரத்தில் ஹேமந்த் பவரை (வயது32) கைது செய்தனர். மேலும் அவா் மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் அவர் மராட்டிய மாநிலம் துலேயை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட வாலிபர் அதிகாரப்பூர்வமாக தான் மத்திய உள்துறையின் அடையாள அட்டை ரிப்பனை வாங்கியதாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் பாதுகாப்பில் குளறுபடி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.