குற்றவாளிகள் அச்சமின்றி சுற்றி திரிகின்றனர்: ஜனாதிபதி முர்மு பேச்சு


குற்றவாளிகள் அச்சமின்றி சுற்றி திரிகின்றனர்:  ஜனாதிபதி முர்மு பேச்சு
x

ஜனாதிபதி திரவுபதி முர்மு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, நாட்டில் குற்றவாளிகள் எந்தவித அச்சமுமின்றி சுற்றி திரிந்து வருகின்றனர் என பேசியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் சுப்ரீம் கோர்ட்டு அமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை குறிக்கும் வகையில் தேசிய மாநாடு நடந்தது. இதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, குற்றம் ஒன்றை புரிந்த பின்னரும் கூட, குற்றவாளிகள் எந்தவித அச்சமுமின்றி நாட்டில் சுற்றி திரிந்து வருகின்றனர் என்பது நம்முடைய சமூக வாழ்வில் சோகத்திற்குரிய ஒரு விசயம்.

இந்த குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், ஒருவித அச்சத்துடனேயே வாழ்கின்றனர். இவற்றில் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைமையோ படுமோசம் என்ற அளவில் உள்ளது என வேதனை தெரிவித்து உள்ளார். ஏனெனில், சமூக மக்கள் கூட அவர்களுக்கு ஆதரவளிப்பது இல்லை என்று பேசியுள்ளார்.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனை கண்டித்து, மேற்கு வங்காளத்தின் சிலிகுரி பகுதியில், பெண்கள், ஆண்கள் என பொதுமக்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தியபடி நேற்று பேரணியாக சென்றனர். சுபாஸ் பள்ளி பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் இந்த பேரணியை நடத்தினர்.

இதேபோன்று கொல்கத்தா நகரிலும், வெவ்வேறு சமூக மக்கள் திரண்டு, கல்லூரி சதுக்கம் பகுதியில் இருந்து நகரின் தர்மதலா பகுதியை நோக்கி பேரணியாக சென்று தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கூட போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story