பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம்: பிரதமர் மோடி பேச்சு
மராட்டியத்தில் பிரதமர் மோடி பேசும்போது, பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையம் செல்ல விரும்பவில்லை எனில், வீட்டில் இருந்தபடியே இ-எப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம் என பேசியுள்ளார்.
ஜல்காவன்,
மராட்டியத்தின் ஜல்காவன் நகரில் லக்பதி தீதி சம்மேளன் என்ற பெயரிலான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பொதுமக்கள் முன்னிலையில் இன்று பேசினார்.
அவர் பேசும்போது, நாட்டிலுள்ள அரசியல் கட்சி ஒவ்வொன்றுக்கும் மற்றும் மாநில அரசுக்கும் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆனது ஒரு மன்னிக்க முடியாத பாவம் ஆகும்.
குற்றவாளிகள் தப்பி விட கூடாது. அவர்களுக்கு எந்த வகையிலாவது உதவி செய்பவர்களும் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்தவொரு அலட்சியத்திற்கும் மக்களே பொறுப்பாளர்களாக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
அது ஒரு மருத்துவமனையோ, பள்ளி, அலுவலகம் அல்லது காவல் துறை நடைமுறையோ, எந்த இடத்தில் அலட்சியம் ஏற்படுகிறதோ, அதற்கு ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் உறுதியுடன் கூறினார். தொடர்ந்து அவர் பேசும்போது, குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்கும் என பெண்களுக்கு பிரதமர் மோடி உறுதி கூறியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மேற்கொள்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதற்காக நம்முடைய அரசு தொடர்ந்து கடுமையான சட்டங்களை இயற்றி வருகிறது. இன்று எண்ணற்ற சகோதரிகளும், மகள்களும் கூடியிருக்கின்றனர்.
இதற்கு முன், சரியான நேரத்தில் எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்தன. வழக்குகள் விசாரிக்கப்படவில்லை. நீதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றும் புகார்கள் வந்தன. இதுபோன்ற பல தடைகளை பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் வழியே, நாங்கள் நீக்கியுள்ளோம் என்று பேசியுள்ளார்.
இதேபோன்று, பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையம் செல்ல விரும்பவில்லை எனில், இ-எப்.ஐ.ஆர். வழியே வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யலாம். அந்த இ-எப்.ஐ.ஆர். பதிவை ஒருவரும் சேதப்படுத்தவோ, மாற்றவோ முடியாது என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சமீப நாட்களாக, நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது.