யுபிஐ சேவையில் கிரெடிட் கார்டை இணைக்கும் புதிய வசதி அறிமுகம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு


யுபிஐ சேவையில் கிரெடிட் கார்டை இணைக்கும் புதிய வசதி அறிமுகம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
x

Image Courtesy : AFP 

கிரெடிட் கார்டு தொடர்பாக சக்தி காந்ததாஸ் வெளியிட்ட அறிவிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது

புதுடெல்லி,

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால வட்டி விகிதம் 0.5% ஆக உயர்த்தப்படுவதாக அவர் அறிவித்தார். ரெப்போ வட்டி விகிதம் 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி மேலும் உயர வாய்ப்புள்ளது. ஏற்கனவே கடந்த மே மாதம் ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் உயர்ந்துள்ளது. 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம், கடந்த 2 மாதத்தில் மட்டும் 0.9% உயர்ந்துள்ளது.

இது மட்டுமின்றி கிரெடிட் கார்டு தொடர்பாக சக்தி காந்ததாஸ் வெளியிட்ட அறிவிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. எளிதான பணப்பரிமாற்றதிற்காக இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் தற்போது யுபிஐ சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுள் பே, போன் பே போன்ற பல செயலிகள் மூலம் சுலபமாக யுபிஐ ஐடி அல்லது "க்யூஆர் கோடு" மூலம் மக்கள் பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர்.

ஆனால் யுபிஐ சேவைகள் இதுவரையில் டெபிட் கார்டுகள் மூலம் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளை இணைத்து பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இனி கிரெடிட் கார்டுகளையும் இணைத்து யுபிஐ சேவைகளை பெறலாம் என தெரிவித்து உள்ளார்.

முதற்கட்டமாக ரூபே (Rupay) கிரெடிட் கார்டுகளை இணைத்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இனி வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டுகளை ஸ்வைப் செய்யாமலே பணப்பரிமாற்றம் செய்யலாம். இதற்கான நடைமுறைகள் முழுவதுமாக முடிக்கப்பட்டபின் இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.


Next Story