சரியான நேரத்தில் சி.பி.ஆர். சிகிச்சை அளித்திருந்தால் 'பாடகர் கேகேவை காப்பாற்றியிருக்க முடியும்' - டாக்டர் கருத்து


சரியான நேரத்தில் சி.பி.ஆர். சிகிச்சை அளித்திருந்தால் பாடகர் கேகேவை காப்பாற்றியிருக்க முடியும் - டாக்டர் கருத்து
x

சரியான நேரத்தில் சி.பி.ஆர். சிகிச்சை அளித்திருந்தால் பாடகர் கேகேவை காப்பாற்றியிருக்க முடியும் என்று பிரேத பரிசோதனை செய்த டாக்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்கள் பாடி புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் என்ற கேகே (வயது 53) கடந்த 31-ந்தேதி மரணமடைந்தார்.

கொல்கத்தாவில் அவர் பங்கேற்ற இசை நிகழ்ச்சியின்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அவரது உடல் கொல்கத்தாவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் ஈடுபட்ட டாக்டர்களில் ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'கேகேவின் இதயத்தின் இடதுபக்க பிரதான கரோனரி தமனியில் மிகப்பெரிய அடைப்பு ஒன்றும், பல்வேறு பிற தமனிகள் மற்றும் துணை தமனிகளில் சிறிய அடைப்புகளும் இருந்தன. இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட அதிகப்படியான உற்சாகத்தால் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிரை பறித்துள்ளது' என்று தெரிவித்தார்.

பாடகர் கேகே மயங்கி விழுந்தவுடனேயே யாராவது அவருக்கு சி.பி.ஆர். சிகிச்சை வழங்கியிருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் எனக்கூறிய டாக்டர், கேகேவுக்கு நீண்டகாலமாக இதய பிரச்சினைகள் இருந்திருப்பதாகவும், அது கவனிக்கப்படாமல் இருந்துள்ளதாகவும் வருத்தத்துடன் கூறினார்.


Next Story