கேரளாவில் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது இந்திய கம்யூனிஸ்ட்- வயநாட்டில் டி.ராஜா மனைவி போட்டி
கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் வயநாடு, திருவனந்தபுரம் ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
திருவனந்தபுரம்,
நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவை பொறுத்தவரை 'இந்தியா' கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்டு கட்சிகளும், காங்கிரசும் எதிரெதிராக போட்டியிடுகின்றன.
கம்யூனிஸ்டு கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி நேற்று கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. அவற்றில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சொந்த தொகுதியான வயநாடும் அடங்கும். அங்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவியும், அக்கட்சியின் இந்திய தேசிய மாதர் சம்மேளன பொதுச்செயலாளருமான ஆனி ராஜா போட்டியிடுகிறார்.
முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் வெற்றி பெற்ற திருவனந்தபுரம் தொகுதியில், முன்னாள் எம்.பி. பன்னியன் ரவீந்திரன் போட்டியிடுகிறார். திருச்சூர் தொகுதியில் முன்னாள் மந்திரி சுனில்குமாரும், மாவேலிக்கரா தொகுதியில் இளைஞர் பிரிவு தலைவர் அருண்குமாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.