2021-ல் கோவிஷீல்டு உற்பத்தி, வினியோகம் நிறுத்தம்; சீரம் இந்தியா அறிவிப்பு
ஆஸ்டிராஜெனிகா நிறுவனத்தின் வேக்ஸ்ஜெர்விரியா மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி, உலக அளவில் கோடிக்கணக்கான மக்களை பாதுகாப்பதில் திறம்பட செயலாற்றின என சீரம் இந்தியா அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில், கொரோனா நோய்த்தொற்று பரவியபோது, அதனை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்தது. இதன் செயல்திறன் 70 சதவீதம் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர் மரணங்களும் மற்றும் கடுமையான காயங்களும் நிறைய பேருக்கு ஏற்பட்டு உள்ளன என புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து ஐகோர்ட்டில் இதற்கு எதிராக 51-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. ரூ.1,047 கோடி வரை இழப்பீடு தொகை தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த சூழலில், ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் கோர்ட்டில் அளித்துள்ள ஆவணங்களில், மிக அரிய வகையாக டி.டி.எஸ். என்ற பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தது. இந்த டி.டி.எஸ். பாதிப்பால், ரத்த உறைதல் ஏற்படுவதுடன், மனிதர்களின் ரத்தத்தில் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைவும் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.
கோவிஷீல்டு தடுப்பூசியானது லேசாக பக்க விளைவுகளை தரும் என அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்தது தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், சீரம் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இன்று கூறும்போது, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதங்கள் இந்தியாவில் அதிகரித்து இருந்தன. புதிய வகை, மரபணு திரிந்த வைரசின் பாதிப்புகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோது தடுப்பூசிகள் அதிகம் போடப்பட்டன. எனினும், 2021 டிசம்பரில் நாங்கள் கூடுதல் தடுப்பூசிகள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது ஆகியவற்றை நிறுத்தி விட்டோம் என்று கூறியுள்ளார்.
இந்த தடுப்பூசியின் பக்க விளைவுகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசும்போது, 2021-ம் ஆண்டு முதல் இந்த தடுப்பூசியால் ஏற்பட கூடிய அரிய மற்றும் மிக அரிய பக்க விளைவுகளை பற்றிய தகவல்களை எங்களுடைய நிறுவனம் வெளியிட்டது. திராம்போசிஸ் எனப்படும் ரத்த உறைதல் உள்ளிட்ட பக்க விளைவுகளை பற்றி நாங்கள் வெளிப்படுத்தினோம்.
ஒரு வெளிப்படை தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வது முக்கியம் என நாங்கள் முழுவதும் அறிந்திருந்தோம் என்று அவர் கூறியுள்ளார். எனினும், உலக அளவில் பெருந்தொற்று சவால்கள் எதிர்கொள்ளப்பட்டபோது, தடுப்பூசியின் பாதுகாப்பானது தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றிருந்தது.
அது ஆஸ்டிராஜெனிகா நிறுவனத்தின் வேக்ஸ்ஜெர்விரியா தடுப்பூசியோ அல்லது எங்களுடைய சொந்த தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியோ, உலக அளவில் கோடிக்கணக்கான மக்களை பாதுகாப்பதில் இரண்டும் திறம்பட செயலாற்றின.
பெருந்தொற்றை உலகளவில் ஒருங்கிணைந்த முறையில் எதிர்கொள்வதில் அரசாங்கங்களும், அமைச்சகங்களும் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டது பாராட்டத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.