முதியவருக்கு ரூ.34 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்; மெத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு கோர்ட்டு உத்தரவு
முதுகுவலியால் அவதிப்பட்ட முதியவருக்கு ரூ.34 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மெத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாந்திநகர்:
பெங்களூரு நாகரபாவி பகுதியை சேர்ந்தவர் தேஷ்பண்ட்(வயது 73). ஓய்வுபெற்ற பேராசிரியரான இவர் கடந்த 2019-ம் ஆண்டு பெங்களூரு டிக்கென்சன் சாலையில் உள்ள மரச்சாமான் கடைக்கு சென்றார். அங்கிருந்து அவர் சொகுசு மெத்தை ஒன்றை ரூ.27 ஆயிரம் கொடுத்து வாங்கினார். ஆனால் வீட்டிற்கு கொண்டு வந்து பயன்படுத்திய சிறிது வாரங்களிலேயே மெத்தை சேதமடைந்தது. இதனால் தினமும் அதில் படுத்து தூங்கிய பேராசிரியருக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளது. முதுகுவலியால் அவதிப்பட்ட அவர் மரச்சாமான் கடைக்கு நேரடியாக சென்றபோது கொரோனா காலம் என்பதால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. எனவே அவர் மெத்தை தயாரிப்பு நிறுவனத்தின் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார்.
மேலும் உத்தரவாத காலம் முடியாத நிலையில், அந்த மெத்தையை சரிசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க கோரினார். ஆனால் அதற்கு கடை சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து அவர் சாந்திநகரில் உள்ள நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, மெத்தைக்கான தொகையை வட்டியுடனும், இழப்பீடாக ரூ.7 ஆயிரத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.35 ஆயிரத்தை முதியவருக்கு, மெத்தை தயாரிப்பு நிறுவனம் வழங்கிட வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.